2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

“தனியார் நிறுவனமே வெளியேறு”

Editorial   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பு.கஜிந்தன்

ஒப்பந்த காலம் நிறைவடைந்து வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டிடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர், குறித்த கட்டிடத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, "தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா?”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடு”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டிடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

எமது சங்க கட்டிடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5 வருட கால ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்த காலம் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை.

வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம் ரூபாய் முற்பணமும், மாதாந்தம் 50ஆயிரம் ரூபாய் வாடகையும் தருவதாகவும் கூறினார்கள். நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம். ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால் புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய நிறுவனத்தின் வருகையால் எமது பகுதியில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கவுள்ளது. ஆனால் அதற்கு எல்லாம் வழி விடாது, ஏதோ ஒரு பின்னணியை வைத்து அந்த நிறுவனம் வெளியேறாமல் இருக்கிறது.

எமது அனுமதியின்றி எமது கட்டடத்திலும், கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலும் பல்வேறுவிதமான வேலைகளை செய்கிறனர். உள்ளே என்ன நடக்கிறது என்று கூட எமக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியிருந்தோம் இருப்பினும் அவர்களும் எமக்கு தீர்வு வழங்கவில்லை.

குறித்த நிறுவனமானது இதற்கு பின்னரும் வெளியேறாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனெனில் அவர்கள் சட்டவிரோதமாக இருக்கிறார்கள். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் எங்களது சங்கத்தின் வளாகத்தில் எங்களது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த செயற்பாட்டையும் நாங்கள் செய்ய முடியும் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X