2026 மே 01, வெள்ளிக்கிழமை

’தமிழர் நில அபகரிப்பும் ஓர் இனப்படுகொலையே’

R.Maheshwary   / 2021 மார்ச் 22 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதானது, எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், ஆகவேதான் நில அபகரிப்பு ஓர் இனப்படுகொலையாகப் பார்க்கப்படுகின்றது என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
'தமிழர் தாயகத்தை இழத்தல்' மாநாட்டில் கலந்துகொண்டு, ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த மாநாட்டில் நீதியரசர் விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,
'தமிழ் மக்கள், இந்த நாட்டின் சுதேச (முதலாவது) குடிமக்கள். 3,000 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். அந்நியர்களின் காலனியாதிக்கம் 1505ஆம் ஆண்டு ஏற்படும் வரை வடக்கு, கிழக்கு பகுதிகளின் நிலப்பரப்பு தமிழ் மன்னர்களின் முழுமையான ஆளுகையின் கீழ் செழிப்பாக இருந்தது. பிரித்தானியர்களின் ஆட்சியின்போது 1833ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாகம் ஒன்றாக்கப்பட்டு பின்னர் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர், அதிகாரம் சிங்கள மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நாள் முதல் எமது நிலங்கள் அதிகார பலத்தின் மூலம் சிங்கள அரசாங்கங்களால் அபகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.
 
'1970களில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம், எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு என்பது சத்தமின்றி, எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பெரும் யுத்தமாக இன்று மாறியிருக்கிறது. நிலம் மட்டுமன்றி, நிலத்துடன் சேர்த்து, எமது வாழ்வும் அடையாளமும் வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது. 
 
'இது மிகப்பெரும் மனித உரிமை மீறல் ஆகும். அரசாங்கங்கள் மேற்கொண்ட இந்த மனித உரிமை மீறல்களே, தமிழ் மக்கள் தமது நிலத்தையும் வாழ்வையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குக் காரணமாக அமைந்தது.
'ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு ஒரு பெரும் இன அழிப்புடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், எமக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை. மாறாக, மேலும் தீவிரம் அடைந்துள்ளது. எமது மக்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம்இ வடக்கு கிழக்கில் தற்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. 
 
'அபிவிருத்தி, தொல்பொருள் ஆய்வு, காடுகள் ஒதுக்கீடு, வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் என்ற போர்வைகளில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, காட்டிலாகா, வீடமைப்பு அதிகாரசபை ஆகிய திணைக்களங்கள் உட்பட பல்வேறு அரச திணைக்களங்கள் எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. இதனை அண்மையில் அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவனம் வெளியிட்ட முடிவற்ற போர் என்ற ஆய்வு அறிக்கையில் ஆதாரங்களுடன் வெளியிட்டது.
 
'இலங்கையில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு பற்றி ஆராய்ச்சி செய்த இஸ்ரேலிய அறிஞரான ஓரன் யிட்ச்பச்சேல் என்பவர், இலங்கையை இனநாயக நாடு என்று விவரித்திருக்கிறார். தனி ஓர் இனத்தின் மேலாதிக்கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் அரசுகளை 'இனநாயக நாடு' என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.
 
'1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது முதல், மிகவும் நுட்பமான முறையில் ஓர் இனநாயக நாடாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் இத்தகைய இனநாயக கட்டமைப்பே இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மை, இன முரண்பாடுகள், ஆயுத யுத்தம், மனித உரிமைகள் மீறல்களுக்குக் காரணமாக இருந்து வருகின்றது. ஆகவே, இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு சமாதான முயற்சிகளோ, பொறுப்புக்கூறல் முயற்சிகளோ, நீதிக்கான முயற்சிகளோ வெற்றி அளிக்கப்போவதில்லை. 
 
'இதனை சர்வதேச சமூகம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படாமல் சமாதானத்தை அடைய முடியாது. அதேபோல, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சமாதானம் அவசியம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளன. நில உரிமைகள் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். ஓர் இனத்தின் அடையாளம், வாழ்வு, செழிப்பு ஆகியவற்றின் உயிர் மூலமாக இருப்பது அந்த இனத்தின் பாரம்பரிய நிலம் ஆகும். 
 
'வடக்கும் கிழக்கும் எமது பாரம்பரிய பிரதேசங்கள். வடக்கும் கிழக்கும் எமது தாயகம். எமது இந்தத் தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கப்படுவது என்பது எமது இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது. ஆகவேதான் நிலஅபகரிப்பு ஓர் இனப்படுகொலை ஆகின்றது. அதனால்தான், எமது பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கையும் கிழக்கையும் பாதுகாக்கும் வழிமுறைகளைச் சவால்களை ஆராய்வதற்காக, 'தமிழர் தாயகத்தை இழத்தல்' என்ற தலைப்பில் இன்றைய இந்த சர்வதேச மாநாட்டை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
 
'இந்த மாநாடு, ஓர் ஆரம்பம். எமது நிலத்தை நாம் பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் நாம் மேற்கொள்ளக்கூடிய வழிவகைகளையும் உபாயங்களையும் வகுத்துச் செயற்படும் பொருட்டு தொடர்ச்சியாகப் பல நிகழ்வுகள் நடைபெறும். எமது இந்த நில மீட்புப் போராட்டத்துக்கு சர்வதேச சமூகம் எல்லாவகையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றுஇ சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .