2026 மே 14, வியாழக்கிழமை

’தளர்வேயன்றி நீக்கமில்லை’

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மகேஸ்வரி விஜயனந்தன்

 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக,  இந்த மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த பயணக்கட்டுப்பாடானது, மூன்று தினங்களுக்குத்  தளர்த்தப்படுகிறதே தவிர முற்றாக நீக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், துறைசார் அமைச்சர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலில், நாட்டின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நிலை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதென்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், “21ஆம் திகதி முதல் பயணக்கட்டுபாடு அமுல்படுத்தப்பட்டதால், மக்கள் தமக்கு தேவையான பொருள்களை, இன்று (25) வரை மாத்திரமே கொள்வனவு செய்திருப்பர். எனவே, மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காகவே, இன்று பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன“ என்றார்.

தற்போதைய கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்தவே, எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுபாட்டை அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்தார். பிரதேச செயலாளர்கள் ஊடாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள உணவுப் பொருட்கள்  மற்றும் மருந்துகள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றைத் தவிர ஏனைய வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதியில்லை.

“தற்போது வரை முடக்கப்பட்டுள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள் வெளியில் செல்ல அனமதிக்கப்பட மாட்டார்கள். தமது வீடுகளுக்கு அருகில் வரும் நடமாடும் வாகனங்கள் மூலம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

“மேலும், பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாட்களில், வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படலாம். ஆனால், குறைந்தளவு ஆளணியுடனேயே வங்கிச் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாத தினங்களிலும் திறந்திருக்கும் என்பதுடன், நடமாடும் சேவை மூலம் பொருள்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, இராணுவத் தளபதி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .