2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள்

Editorial   / 2024 மே 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டில் அற்புதம் அம்மாள் என்றால் தெரியாதவர்கள் இல்லை. அவரது மகனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக 31 வருடங்கள் சட்டப் போராட்டத்தைச் சலிக்காமல் நடத்தியவர்.

எந்தக் கட்டத்திலும் சோர்ந்து போகாமல் இறுதிவரை உறுதியாக நின்று தனது மகனைச் சட்டத்தின் மூலம் விடுதலை பெற்றுத் தந்தவர்.

பேரறிவாளன் 1991 ஆம் ஆண்டு கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தனது மகன் ஒரு அப்பாவி. விசாரணை என்று அழைத்துப் போன காவல்துறை, அவனை ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டது என்று கூறி, இடைவிடாமல் போராடி வந்தார் அற்புதம்.

அதன்பின்னர் இவரது தூக்குத்தண்டனை 2014இல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் 2022 மே 18 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் வெளியே வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் மேலாகிவிட்டது. அவரது தாய் அன்னையர் தினத்தை ஒட்டி ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், தனது மகனின் எதிர்காலம் குறித்த கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை ஆனதில் எனக்கு முழு மகிழ்ச்சி இல்லை. அவனுக்கு என்று ஒரு குடும்பம் அமைய வேண்டும். அப்போதுதான் முழு மகிழ்ச்சியை நான் அடைவேன். அவன் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைந்துவிடவில்லை' என்று ஒரு தாயின் ஏக்கத்தை அந்தப் பேட்டியில் அவர் பதிய வைத்துள்ளார்.

மேலும் தனது மகனைப் பற்றி அற்புதம் அம்மாள் பேசுகையில், "ஒவ்வொரு முறையும் சிறையில் என் மகனை சந்திக்கும்போது எல்லாம், 'என்னப்பா இந்த முறையும் உன் விடுதலை தள்ளிப் போய்விட்டதே?' என்று வேதனையோடு சொல்வேன்.

அவன் மனம் தளராமல், 'அடுத்த முறை சரியாகிவிடும் அம்மா. நீ நம்பிக்கையோடு போய் வா' என்பான். அந்தளவுக்கு அவனது மன உறுதியை நான் பார்த்திருக்கிறேன்.

அப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வரும். எப்படியாவது நம் மகனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியம் பிறக்கும். அப்படித்தான் என் மகனை மீட்பதற்காக 31 ஆண்டுகள் போராடினேன்.

ஒரு நாள் கூட என் குடும்பத்தைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. இந்த 31 ஆண்டுகள் நானும் என் வாழ்க்கையை இழந்திருக்கிறேன்.

என் மகன் சிறைக்குப் போகும் போது என் 2 மகள்களுக்கும் திருமணம் நடக்கவில்லை. ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஒருவர் என் மகளை வந்து திருமணம் செய்து கொள்வதற்காகப் பார்த்துவிட்டுச் சென்றார்.

அடுத்த சில நாள்களிலேயே என் மகன் வழக்கில் சிக்கிக் கொண்டான். பேரறிவாளன் செங்கல்பட்டு சிறையிலிருந்தான். நான் போய் விசயத்தைச் சொன்னேன்.

அவன், 'திருமணத்தை மட்டும் நிறுத்தி விடாதீங்க. நிறைய புகைப்படங்கள் எடுங்கள். நான் வெளியே வரும்போது அவற்றைப் பார்த்துக் கொள்கிறேன்' எனத் தைரியம் கொடுத்தான். அந்த முடிவுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றியது. என் மகள்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.

என் மகன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. பலரிடம் என் அடுத்த வேலையே அதுதான் என்று சொல்லி வந்தேன்.

ஆனால், மகனின் விருப்பம் வேறாக உள்ளது. அவன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என் மனைவியை அடுத்தவர்கள் காசில் வாழ வைக்க நான் விரும்பவில்லை. நான் சம்பாதித்து வருபவரைக் காப்பாற்ற வேண்டும்' என்கிறான்.

அறிவுக்கு 52 வயதாகிவிட்டது. என் மகள்கள் அவரவர் தனித்தனியாக வாழ்கிறார்கள். இவனைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும். நாளை நானும் இல்லை என்று வரும்போது என் மகன் தனித்து நிற்பான். அந்த ஏக்கம் என் மனதில் இருக்கிறது. வருத்தம் இருக்கிறது.

அறிவு இப்போது 2 ஆம் ஆண்டு படித்து வருகிறான். அவனது படிப்பு முடிய இன்னும் 1 வருடம் உள்ளது. அதன்பிறகு அவன் திருமணம் செய்வான் என நினைக்கிறேன்.

அவன் எனக்கு ஏதாவது ஒரு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என விரும்பினால், அது அவன் திருமணம் செய்து கொள்வதில்தான் உள்ளது" என்றபடி கண் கலங்கி பேசி இருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் தனது அம்மாவைப் பற்றி பேரறிவாளன் பேசுகையில், "பொதுவாகவே தாய் அன்பு என்பது சிறந்ததுதான். ஆனால், அதை நிரூபிப்பதற்காக வாய்ப்புகள் பலருக்கும் கிடைக்காது. அந்த வகையில் எனக்காக எவ்வளவு தூரம் போராட முடியுமோ அதுவரை போராடி நிரூபித்தவர் என் அம்மா.

அவரை வழக்கமாக நான் நேருக்கு நேராகப் புகழ்ந்து பேசியதில்லை. அப்படி ஒரு பழக்கம் இருந்ததில்லை" என்று பேசிய அவர் தனது தாய்க்கு அன்புப் பரிசாக ஒரு புடவையை வாங்கி பரிசளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X