2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘த.தே.கூவுக்கு ஆளும் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கவும்’

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அமைச்சரவையைத் தீர்மானிக்கும் பொறிமுறை தங்கள் கைகளில் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளமையால், நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பக்கத்தில், கூட்டமைப்புக்கான ஆசனங்களை ஒதுக்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, கூட்டமைப்பு, அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

சபாநாயகர் கருஜய சூரியவுக்கு நேற்று (17) அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்கண்டவாறு ​சுட்டிக்காட்டியுள்ள அவர், நாடாளுமன்றத்தில் இடம்பெறும் சகல நடவடிக்கைகளின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை, ஆளும் தரப்பு எம்.பிக்களாகவே கவனத்தில் கொள்ளவேண்டுமென்றும் கோரியுள்ளார்.  

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 12ஆம் திகதி இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய, அக்கூட்டமைப்பின் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் உரைகளை மேற்கோள்காட்டி எழுதியுள்ள அந்தக் கடிதத்துடன், அவ்விருவரின் உரைகளடங்கிய, 13ஆம் திகதிய பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் இணைத்துள்ளார்.   

அதுமட்டுமன்றி, அவ்விருவரின் உரைகள் அடங்கிய தொலைக்காட்சி செய்திகளை, ஆவணமாகக் குறிப்பிட்டு அனுப்பி​யுள்ள அந்தக் கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியில் அமர்வதால், எதிர்க்கட்சிக்குரிய நேரங்களே வீணாகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

அமைச்சரவைத் தீர்மானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகப் பங்குபற்றுகின்றது எனில், அமைச்சுகளை வழிநடத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது எனில், அக்கூட்டமைப்பு எம்.பிக்கள், ஆளும் கட்சியின் உறுப்பினர்களாவர் என்பது தெட்டத்தெளிவாகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.   

“அவ்வாறானவர்களுக்கு, விவாதங்களில் ஒதுக்கப்படும் நேரம் மற்றும் நாடாளுமன்றச் செயற்குழுக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவைக்கான அங்கிகாரம் ஆகியன, எதிர்க்கட்சியின் தரப்பில் வழங்கப்படுமாயின், அது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய காலத்தில், அதன் எம்.பிக்கள், ஆளும் கட்சியினரை போன்றே செயற்பட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ள கம்மன்பில எம்.பி., எவ்விதமான திருத்தங்களையும் முன்வைக்காது, நிபந்தனைகளையும் விதிக்காது, நான்கு வரவு-செலவுத்திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த உலகத்தி​லுள்ள ஒரேயோர் எதிர்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகுமென அக்கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

பிரதமருக்கு எதிராக, 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, வாக்களித்த ஒரேயோர் எதிர்க்கட்சியென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உலக சாதனை படைத்து, பெயர் பெற்றுள்ளது என்பதுடன், ஆளும் தரப்புக்கு அவ்வளவுக்கவ்வளவு நம்பிக்கை கொண்ட கூட்டமைப்புக்கு, ஆளும் தரப்புக்கான முழுமையான அங்கிகாரத்தை வழங்குமாறும் அக்கடிதத்தின் ஊடாக கம்மன்பில எம்.பி கோரியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .