Editorial / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர் விவகாரங்கள் தொடர்பில் தன்னால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அல்லது சமர்ப்பிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பத்திரங்கள் அனைத்தும் சர்ச்சைகளுக்குரியவையே. அதனால், அவை பற்றி அமைச்சரவை எந்தவொரு முடிவையும் எடுக்கலாமென்றும் கூறியுள்ள அமைச்சர் மனோ கணேசன், இதோ சமர்ப்பித்துவிட்டேன்; என் கடமை முடிந்துவிட்டதெனப் பணிபுரியும் “கடமை வீரன்” தானல்லவென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'மனோவின் வாக்குறுதிக்கு என்னாச்சு?' எனும் தலைப்பில் நேற்றைய தினம் (07) பிரசுரமான, தமிழ்மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் குறித்து, தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் தொடர்ந்தும் கூறியுள்ள அமைச்சர், தமிழ்மிரர் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பத்திரம் இப்போது மொழிபெயர்ப்பில் உள்ளதாகவும் சபரிமலை விவகாரம் தொடர்பான பத்திரம், ஏற்கெனவே சமர்பிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
அத்துடன், தொல்பொருள் திணைக்கள ஆலோசனை சபைக்கு, தமிழர்களையும் இணைத்துக்கொள்ளும் விவகாரத்தில், தமிழர்களை இணைக்குமாறு கூறுவதை விட, தமிழ் வரலாற்றுவியலாளர்களையும் பெயரிட்டே பத்திரம் வரவிருப்பதாகவும் இதற்கு அவ்வரலாற்றுவியலாளர்களின் ஒப்புதல்களைப் பெறவேண்டும் என்பதாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தான் சமர்ப்பித்த அல்லது சமர்ப்பிக்கவிருக்கின்ற பத்திரங்களை அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ள வைக்க, நல்லெண்ண அமைச்சரவை சகாக்களுடன் முன்கூட்டியே பேசி, அவர்களின் ஆதரவைப் கோர வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மனா, இவை முன் தயாரிப்பு வேலைகள் என்றும் இதுவே தனது வெற்றிகரமான பாணியென்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதில் பல நடைமுறைசார் பிரச்சினைகளும் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், அமைச்சரவை பத்திரங்களை கவனமாக மொழிபெயர்த்து மூன்று மொழிகளிலும் சமர்பிக்க வேண்டுமென்றும் பின்னர் அவற்றை அமைச்சரவைச் செயலகத்துக்குக் கொடுத்துவிட்டால், அவற்றை ஏனைய அமைச்சர்களின் பத்திரங்களுடன் வரிசைப்படுத்தியே, ஒரு கூட்டத்தில் சுமார் 70 பத்திரங்கள் வரை செயலகத்தினால் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவை நாள் சம்பளத்தில் சேர்ப்பதும் வீட்டுக் காணி உரிமை என்பது, குத்தகை அடிப்படையில் அல்லாமல் சொந்தக் காணியாக உறுதிப் பத்திரம் வழங்கப்படுவது பற்றியும், தானும் அமைச்சர் திகாம்பரமும் அமைச்சரவையில் முன்னெடுத்த போது, சிங்கள அமைச்சர்கள் பலர், தமக்கே ஆதரவளித்ததாகவும் அவர்களில் எவரும், அமைச்சர் நவீனுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும், அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பின்னால், எனதும் திகாம்பரத்தினதும், இராதாகிருஷ்ணனதும் உழைப்பு நிறையவே இருப்பதாகவும் கூறியுள்ள அவர், இவை முழுதாக வெளியுலகக் கண்களுக்கு ஒருபோதும் தெரியவரவே வராதென்றும் செய்யும் பணி தொடர்பில் ஆத்ம திருப்தி கிடைப்பதே போதுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவில் பின்குறிப்பொன்றையும் பதிவு செய்துள்ள அமைச்சர், அமைச்சரவைக்கு வெளியே, இன்று எரியும் பல தமிழர் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது தான் சொன்ன, சொல்லும் பல்வேறு தீர்வு யோசனைகள் பற்றி, குறிப்பாக அனைத்துத் தமிழர் நாடாளுன்ற ஒன்றியம், புதிய அரசமைப்பு, திருக்கேதீஸ்வர வளைவு, கன்னியா, நீராவியடி போன்ற விவகாரங்களில், தன்னுடன் இணைந்து பேசிக் கூட்டாகச் செயற்பட மறுக்கும் ஏனைய பல தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில், ஏன் இந்த ஆசிரிய தலையங்கம் மூச்சுவிடாமல் அமைதி காக்கிறதென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago