2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

‘நேரம் ஒதுக்காமை சிறப்புரிமை மீறல்’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசமைப்புச் சபை வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுவதற்கு, தனக்கு நேரம் ஒதுக்கப்படாமையானது, நாடாளுமன்ற உறுப்பினருக்கான தனது சிறப்புரிமையை மீறுவதாகும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. விவாதம் ஆரம்பிக்கும் முன்பே எழுந்த, சிவசக்தி ஆனந்தன் எம்.பி, மேற்படி குற்றச்சாட்டை, சபாநாயகரின் முன்பாக முன்வைத்தார். 

“இந்த விடயம் தொடர்பில் மூன்று தடவைகள் எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன். ஆனால், சாதகமான முடிவுகள் இதுவரை இல்லை. மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எனக்கு, இங்கே கருத்துகளை முன்வைக்க எதிர்க்கட்சித் தலைவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்” என்றார்.  

“எனது மக்கள் சார்பாக, இந்த அரசமைப்புத் தொடர்பில் எனது கருத்துகளை முன்வைக்க இடங்கொடுக்கப்படாதது ஏன்? எனது கருத்துகளைத் தெரிவிக்க இடமளிக்கப்படுமென உறுதிமொழி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நான், இங்கே இருப்பதில் பயனில்லை. அனைவருக்கும் உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் தருவதாக நீங்கள் நேற்று (செவ்வாய்) இந்தச் சபையில் கூறியிருந்தீர்கள்” என்றார். 

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “நான் தன்னிச்சையாக எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு கட்சியின் தலைவர்கள்தான் யார் உரையாற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்கள். நீங்கள் எனக்களித்த கடிதம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு, எதிர்க்கட்சித் தலைவரிடம் கோருகிறேன்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .