2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘படுகொலை சதி முயற்சி; என்னிடமும் சி.ஐ.டி விசாரித்தது’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

* இரண்டு வாரங்களில் முழு விவரமும் அம்பலமாகும் 

* 2 மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்

* சபையில் ஜனாதிபதி வருந்தினார்

-அழகன் கனகராஜ்

தன்னையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி), கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர், தன்னிடமும் விசாரித்தனரெனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்குப் பின்னரான நடவடிக்கைகளை, சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுக்கும் என்றார்.

மூன்று மாதங்களுக்கு ஒருதடவை, சபைக்கு வருகைதரவேண்டிய ஜனாதிபதி, மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு நேற்று (06) வருகைதந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தவறாளர்களை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ், கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்கு ஒருதடவை சபைக்கு வருகைதர வேண்டுமென்ற போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால், கடந்த 3 மாதங்களாக சமுகமளிக்க முடியாமல் போய்விட்டதாகவும் அதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துகொண்டதோடு,  அதனைச் சுட்டிக்காட்டிய  நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தன்னுடைய நன்றியை ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்ற தன்னுடைய நிலைப்பாட்டில், எவ்விதமான மாற்றங்களும் இல்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் இரண்டு மாதங்களுக்குள், மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றார்.

வெலிக்கடை சிறைச்சாலையே போதைப்பொருள்களின் மய்யமெனத் தெரிவித்த ஜனாதிபதி, மரண தண்டனை நிறைவேற்றப்படுமென்ற தன்னுடைய அறிவிப்பின் பின்னர், மேன்முறையீடு செய்யாமலிருந்த மரண தண்டனைக் கைதிகளும், மேன்முறையீடு செய்துவிட்டனர். இதுவே பெரும் சிக்கலாகியுள்ளது என்றார்.

ஆனால், பாகிஸ்தான் பிரஜைக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் கூடுதல் அவதானத்தைத் தான் செலுத்தியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவரை, (பாகிஸ்தான் பிரஜையை) அந்நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கைகளை மேன்கொண்டதாகக் கூறினார்.

எனினும், குற்றவாளியான அந்த நபர் (பாகிஸ்தான் பிரஜை), தன்னை அந்நாட்டுக்கு (பாகிஸ்தானுக்கு) அனுப்ப வேண்டாமென்றும் அவ்வாறு அனுப்பினால், அங்கு தண்டனை விரைவாக நிறைவேற்றப்படுமெனத் தெரிவித்துவிட்டார். இதுவும் பிரச்சினையான காரணங்களாகும் என்றார்.

இதேவேளை, போதைப்பொருள் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு, மனித உரிமைகள் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றனவா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, அங்குணகொலபெலஸ சிறைச்சாலைக்கு, விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்திய போது, உள்நாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு, ஏன்? யார்? எதற்காக? விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டனர் போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

இதுவும் ஒருபுறத்தில், போதைப்பொருள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும் என்று தெரிவித்த அவர், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்படும் என்றார்.

உயர் நீதிமன்றத்துக்கு நீதியசர்களை நியமிப்பது தொடர்பில், இரண்டு பெயர்களைத் தான் அனுப்பியதாகவும் அந்த இரண்டு தடவைகளும், அப்பெயர்கள் அரசமைப்புப் பேரவையினால் நிராகரிக்கப்பட்டு விட்டதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரதம நீதியரசரால் வழங்கப்பட்ட பெயர்களையே தான் அனுப்பிவைத்ததாகக் கூறினார்.

“இந்நிலையில், என்னிடமே பாதுகாப்பு அமைச்சு உள்ளதென்றும் என்னைப் படுகொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில், என்னிடமே கேட்டறிந்துகொள்ளுமாறும், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், சபையில் இன்று (06) தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான முழுமையான விவரங்களை, நாட்டு மக்கள், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். அதன் பின்னர், மேற்படி விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை, சட்ட மா அதிபர் திணைக்களமே முன்னெடுக்க வேண்டும்” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .