Janu / 2026 ஜனவரி 28 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்

தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை அறிமுகப்டுத்துவதென்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்டுவதாக தெரியவில்லை.
இந்த புதிய அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும என்றும் ஊழல் ஒழிக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய உடன் அவர்களிடம் அவற்றை எதிர்ப்பார்ப்பதும் நியாயமில்லை.
ஏனெனில் தேசிய மக்கள் சக்தி 2024 ஆம் ஆண்டு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் நிலையிலேயே இருந்தது. பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டு இருக்கவில்லை. அதேவேளை தேசிய மக்கள் சக்தியிடம் நீண்ட காலமாக அதற்கு வாக்களித்த வாக்கு வங்கியொன்று இருக்கவும் இல்லை.
அக்கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 57 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் சுமார் 69 இலட்சம் வாக்குகளையும் பெற்றமை உண்மை தான். ஆனால் அதற்கு அதில் அரைவாசியான நிலையான வாக்கு வங்கியொன்றாவது இருக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்ட திடீர் திருப்பத்தின் காரணமாகவே தேசிய மக்கள் சக்தி தெர்தல்களில் வெற்றி பெற்றது.
அந்த வாக்காளர்கள் நிலையான வாக்கு வங்கியாக இன்னமும் மாறவில்லை. கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் அது தெளிவாக தெரியவிருந்தது. இந்த நிலையில் அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்ப்பது போன்ற வாக்காளர்களை குழப்பியடிக்கும் விடயங்களில் கைவைக்கும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயமற்ற விடயமாகும்.
அதேவேளை பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்து சிறிது சிறிதாக நிலைத்தன்மையை அடைந்து வரும் நிலையில் அரசியல் நெருக்கடிகளை தோற்றுவிக்கக்கூடிய விடயங்களில் கைவைபப்தும் புத்திசாலித்தனமானதல்ல. அரசியல் நெருக்கடிகள் காரணமாக பங்குச் சந்தை போன்றவற்றில் குழப்ப நிலை ஏற்படலாம். ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தொழில்துறை பாதிக்கப்படலாம். அதனால் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தடை ஏற்படலாம்
தாம் மக்களுக்கு வாக்களித்தோம் என்பதற்காக பொருளாதாரம் சீரழிந்த நிலையில் எடுத்த எடுப்பில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பதும் யதார்த்தபூர்வமானதல்ல. எனவே ஆரம்பத்தில் அரசாங்கம் அரசியலமைப்பு விடயத்தில் நடவடிக்கை எடுக்காததை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் தொடர்ந்தும் இந்த விடயங்களை அரசாங்கம் தள்ளிப் போடுமேயானால் அது அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும்.
அரசாங்கம் இந்த விடயத்தில் மக்களை ஏமாற்றப் போகிறது என்று நினைக்க நியாயமான காரணங்கள் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூற முடியும். அதாவது புதிய அரசியலமைப்பு விடயத்தில் இதோ நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதோ நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள் அடிக்கடி கூறி வந்த போதிலும் இப்போதைக்கு அது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேபோல் அவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்துக்குள் ஏதாவது கலந்துரையாடல் நடைபெறவதாகவும் தெரியவில்லை.
இது பல்வேற அமைச்சர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வரும் கருத்துககளால் தெரிகிறது. தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசிலுமைப்பு கொண்டுவரப்படும் என்று தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பு மூன்றாண்டுகளில் தான் கொண்டுவரப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசியலமைப்புக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்காரவும் ஊடகங்களிடம் தெரிவசித்தார்.
அதனை அடுத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கடந்த வருடம் பல முறை புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உதாரணமாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதலளித்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி உரையாற்றிய பிரதமர் மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெற்ற உடன் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார். இது நீதி அமைச்சரின் கருத்துக்கு முரணானதாகும்.
அதேபோல் புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கடந்த வருடம் ஜூலை 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார். அரசாங்கத்துக்குள் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு இருந்தால் இவ்வாறு அமைச்சர் அடிக்கடி ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களை தெரிவிக்கத் தேவையில்லை.
தமது அதிகாரத்தை பலமான முறையில் நிலைநாட்டிக்கொள்ளாமல் அரசியலமைப்பு போன்ற பரதூரமாதும் சிக்கலானதும் சிலவேளை மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடியதுமான ஒரு விடயத்தில் கைவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அச்சப்படுவதாகவே தெரிகிறத. குறிப்பாக இனப் பிரச்சினையை மறந்து புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதானது முடியாத காரியமாகும். ஆனால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும் முதல் கட்டத்திலேயே அரசாங்கம் பெரும் நெருக்கடியொன்றில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
கடந்த காலங்களில் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கும் பணியில் இறங்கிய சகல அரசாங்கங்களும் அந்த விடயத்தை கைவிட இனப் பிரச்சினையே காரணமாகியது. இனப் பிரச்சினையை பாவித்து அரசியலமைப்பு மாற்றத்தை குழப்புவதற்கென்றே ஒரு கூட்டம் வடக்கிலும் தெற்கிலும் இருக்கிறது.
புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதாக இருந்தால் இனப் பிரச்சனைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்தரிரிகா குமாரதுங்க நன்கு அறிந்திருந்தார். எனவே 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அவர் முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்iவொன்றை காண முற்பட்டார். அதன் படி 1995 ஆம் ஆண்டு அக்காலத்தில் புக்கேஜ் என்று பலரால் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டததை முன்வைத்தார். பேராசிரியர் ஜீ எல் பீரிஸ_ம் காலாநிதி நீலன் திருச்செல்வமுமே அதனை தயாரித்தனர்.
இலங்கை ஒற்றை ஆட்சியுள்ள நாடாகவன்றி பிராந்தியங்களின் ஒன்றியமாகவே அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. ஆயினும் சந்திரிகாவின் அரசாங்கம் அதனை கைவிடவில்லை. 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கம் சில மாற்றங்களுடன் அதனை மீண்டும் முன்வைத்தது. 2000 ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்திரிகா புதியதோர் அரசியலமைப்புக்கான நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதிலும் இந்தத் தீரவுத் திட்டம் உள்ளடக்கப்ட்டு இருந்தது. ஐக்கிய தெசிய கட்சி உறுப்பினர்கள் அவ்வரசியலமைப்பு நகலின் பிரதிகளை நாடாளுமன்றத்துக்குள்ளேயே எரித்ததனர். பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.
அதனை அடுத்து 2015 ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி - ரனில் அரசாங்கமும் புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்காக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றம் அரசியலமைப்பு மன்றமாக (Constitutional Assembly) மாற்றப்பட்டது. அதன் கீழ் வெவ்வேறு துறைகளை ஆரihய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டது. அந்த குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தலைமையிலான வழிநடததல் குழு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடைக்கால அறிக்கையொன்றை நாடாளுமன்றததில் சமர்ப்பித்தது.
அதன் மூலம் இலங்கையானது ஒற்றை ஆட்சியுள்ள நாடு (ஏக்கீய ராஜ்ஜிய) என்று சிங்களத்திலும் ஒருமித்த நாடு என்று தமிழிலும் குறிப்பிடப்பட்டது. அதனை தமிழ் தேசியவாதிகளும் சிங்கள தேசியவாதிகளும் நிராகரித்தனர். சிங்களத்தில் ஒற்றை ஆட்சியுள்ள நாடு என்பதை தமிழர்கள் நிராகரித்தனர். ஒருமித்த நாடு என்பது சமஷ்டியே என்று சிங்கள் தேசியவாதிகளும் அதனை நிராகரித்தனர். இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரனில் விகரமசிங்கவுக்கும் இடையே வேறு காரணங்களுக்காக முறுகல் நிலை ஏற்படவே அந்த இடைக்கால அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.
சிங்கள தேசியவதிகளுக்கிடையிலும் தமிழ் தேசியவாதிகளுக்கிடையிலும் நிலவும் அரசியல் போட்டி மனப்பான்மையால் சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்களிடையே இணக்கம் காண்பது ஒருபோதும் சாத்தியமில்லததாகவே தெரிகிறது. சிங்கள தரப்பாருடன் நியாயமான முறையிலாவது ஒரு தமிழ் கட்சி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மற்றைய தமிழ் கட்சிகள் அதனை துரோகம் என்று குற்றச்சாட்டும். அதேபோல் இணக்கம் ஏற்படுத்திக் கொண்ட சிங்கள கட்சிக்கு ஏனைய சிங்கள தேசியவாத கட்சிகளும் துரோகி முத்திரையை குத்தும்.
இந்த நிலையில் தமிழ் மற்றும் சிங்கள் தரப்பாரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது நினைத்தும் பார்க்க முடியாத காரியமாக மாறியுள்ளது. எனவே தான் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் அந்தத் தீர்வோடு புதிய அரசியலமைப்பொன்றை வரைவதும் இது வரை கானல் நீராக இருந்து வந்துள்ளது.
28.01.2026
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago