2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வெளியிடாமல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பொறுப்பற்ற முறையில் காலங்கடத்தி வருகின்றமையால் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் அவர்கூட சரியான நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் கண்மூடியிருப்பதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயின்ற ஆசிரியர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றிருந்தன. அவர்களது பரீட்சைப் பெறுபேறுகள் 2016 ஜுன் மாதமளவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட போதும் டிசெம்பர் மாதமாகிவிட்ட போதிலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

தற்போது இப்பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட்டால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஆசிரியர் தரம் உயர்த்தப்பட்டு அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் ஆசிரியர் கலாசாலைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சம்பளங்களை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும் அரச ஊழியர்களாகவுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் மனமின்றி இருந்து வருவதுடன் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைக் கூட வெளியிடாமல் காலங்கடத்தி வருகின்றது என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .