2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’பலத்தைக்கண்டு கம்பனிகள் நடுங்கியுள்ளன’

Kogilavani   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு தொழிலாளர்கள் தமது பலத்தை நிருபித்துவிட்டதாகத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களின் பலத்தைக் கண்டு கம்பனிகள் நடுங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

'முயற்சிசெய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்'  என்றும் தெரிவித்தார்.

'தொழிலாளர்களுக்கான ஊதிய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். அந்தவகையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சர்வமதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், சிவில் அமைப்புகள், ஆசிரியர்கள், தோட்டத்தொழில் அல்லாமல் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பார்த்ததைவிடவும் பேராதரவு கிட்டியது. இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் கூட உணர்வுப்பூர்வமாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

'அதுமட்டுமல்ல கொழும்பிலுள்ள வர்த்தகர்களும் ஆதரவை நல்கியுள்ளனர். 8 சர்வதேச நாடுகளும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தன. மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டுவந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்துப் போராடுவதற்கு தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர்.

'திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவித்தால் திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதேவேளை, இது இ.தொ.காவின் பலத்தைக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக்காட்டியுள்ளனர். முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. இதன்படி பாரிய போராட்டத்தை நடத்தி மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X