2026 ஜனவரி 28, புதன்கிழமை

பழக்கவழக்கங்களில்“உணவுப் பாதுகாப்பு ஓர் அங்கமாக வேண்டும்”

Janu   / 2026 ஜனவரி 28 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக மாற வேண்டும்  என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"உணவுத் துறையில் சுழற்சி பொருளாதாரத் திட்டம் (2024 - 2027)" எனும் தலைப்பிலான, உள்நாட்டு சுழற்சி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்குமான கல்வி குறித்த தேசிய கருத்தரங்கு கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் புதன்கிழமை (28) அன்று நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் 'குளோபல் கேட்வே' (Global Gateway) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு பல தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதன்போது, குறிப்பாகப் பாடசாலைக் கல்வியில் சுழற்சி பொருளாதாரக் கருத்துருக்களை உள்வாங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள், திறன் அபிவிருத்திப் பிரிவுகள் மற்றும் முறைசார் கல்விப் பங்குதாரர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்களின் ஊடாக சுழற்சி பொருளாதாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், 2027ஆம் ஆண்டு வரை இலங்கையின் உணவுத் துறையில் நிலையான மற்றும் சுழற்சி பொருளாதார முறைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்:

கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. உண்மையான கல்வி என்பது தனிமனிதனுக்குள் சமூகம் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதேயாகும். குறிப்பாக, தற்காலச் சூழலில் எமக்கு மிகவும் முக்கியமானது 'சுழற்சி பொருளாதாரம்' (Circular Economy), அதாவது வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு முறைமையே ஆகும்.

இன்று நாம் 'Circular Economy' என அழைக்கும் இந்தக் கருத்துரு எமது முன்னோர்களுக்குப் புதிய ஒன்றல்ல. எனக்கு எனது பாட்டி நினைவுக்கு வருகின்றார். உணவு வீணாவதைக் குறைப்பதில் அவர் வியக்கத்தக்க திறமையைக் கொண்டிருந்தார். நாம் தூக்கி எறியும் பஸன் புரூட் (Passion Fruit) தோல்களிலிருந்தும் அவர் சுவையான ஜாம் மற்றும் சட்னிகளைத் தயாரித்தார். பால் போத்தல்களின் உலோக மூடிகளைக் கூட அவர் வீசுவதில்லை, அவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவார்.

இன்று சுப்பர் மார்க்கெட்களில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை, அன்று அவர்கள் தமது கைகளாலேயே உருவாக்கிக்கொண்டார்கள். 'எதனையும் வீணாக்காதிருத்தல்' என்பதே அவர்களின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது.

ஆயினும், இன்று காலம் மாறியுள்ளது. அன்று எமது பாட்டிமாருக்கு இவற்றைச் செய்ய நேரம் இருந்தது. இன்று பெண்கள் தொழிலுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளின் பணிகளைக் கவனிக்கிறார்கள், அவர்கள் கடும் பணிச்சுமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், நேரமின்மை காரணமாக வீணாகிப்போன காய்கறிகளையோ அல்லது பழைய தேங்காய்த் துண்டுகளையோ காண்பது சாதாரண விடயமாக மாறியிருக்கின்றது.

இது வெறும் பெண்ணின் அல்லது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு வீட்டிற்குள் இந்தப் பொறுப்புகளும் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கங்கள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக அவை மாற வேண்டும். உணவைப் பரிமாறும்போது தமக்குத் தேவையான அளவை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தனது தட்டைத் தானே கழுவுதல், வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுதல் போன்றவை வெறும் பாடங்களாக அன்றி, வாழ்க்கை முறைகளாக மாற வேண்டும்.

சுற்றுலாத்துறை போன்ற துறைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இந்தக் கருத்துருக்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி அமைச்சு என்ற ரீதியில் நாம் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். வெறும் அறிவை மாத்திரமன்றி, மனப்பூர்வமாகச் சூழலையும் சமூகத்தையும் நேசிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X