எம். செல்வராஜா
பசறை பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகள், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, நேற்று (01) தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பாதையருகே இருந்த பாறைக்கல் அகற்றப்படாமை, பாதை குறுகியதக இருந்ததன் காரணமாகவே விபத்து சம்பவித்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கவனயீனமாக இருந்துள்ளதாகவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் மைல் கல்லருகே இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன், 30 பேர் காயமடைந்திருந்தனர்.
இவ்விபத்தில் 9, 8, 4 ஆகிய வயதுகளையுடைய மூன்று பிள்ளைகள் பெற்றோரை இழந்த நிலையில், தமது தாத்தா, பாட்டி ஆகியோரால் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்திய சாரதியும் ஞாயிற்றுக்கிழமை (31) மாரடைப்பினால் மரணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.