2026 மே 07, வியாழக்கிழமை

‘பௌத்த மத்தியஸ்தானம் அமைக்க முடியாது’ -த.தே.கூ

Editorial   / 2021 மே 03 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதிக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் பௌத்த பிக்குகளும் அண்மையில் வருகை தந்து, அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் செய்தி வெளியாகியமையைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், அவ்விடத்துக்கு சனிக்கிழமை (01) கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மேற்படி பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் பரிசீலித்தனர்.புளுட்டுமானோடை பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன், பல செதுக்கல்கள், படி அமைப்புகள் போன்றனவும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.

மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும், இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று கூறி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசாங்கம் செயற்பட முனையக் கூடாதென மக்கள் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு அதிகாரிகளும் ஒத்துழைக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர்கள், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்றும் எச்சரித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .