2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பேரினவாத தமிழ்த் தலைமைகளுக்கு எதிராக 'சம்பந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

தனி ஈழம் மற்றும் வட, கிழக்கு இணைப்பு விவகாரம் ஆகிய கொள்கைகளிலிருந்து விடுபட்டு, நாம் தேசிய வாதத்தை ஏற்றுக்கொண்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என, ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

மேலும், தமது கொள்கைகளிலிருந்து இன்னும் விடுபடாத பேரினவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கெதிராக எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களது செயற்பாடு நாட்டின் நல்லிணக்கத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் அதேவேளை, மீண்டும் யுத்த காலத்தில் ஏற்பட்ட மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடக்கில் தற்போது தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். ஆனால், சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை.

எனவே, இது தொடர்பில் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் டி.எம்.சுவாமிநாதன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்நிலை நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

தமிழ் மக்களுக்காக இந்த அரசாங்கம் பல வரப்பிசாதங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் இன்னும் தனி ஈழம், வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் போன்ற கொள்கைகளிலிருந்து பேரினவாத தமிழ் அரசியல்வாதிகள் மாறவில்லை. இதனைப் பார்த்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் மௌனம் காப்பது தவறாகும். எனவே, இவ்வாறான பேரினவாத தமிழ் தலைமைகளுக்கெதிராக சம்பந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், கொத்தணிக் குண்டு, விஷ ஊசி விவகாரம் தொடர்பான பழிகள் அனைத்தும் இராணுவத்தின் மீது சுமத்திப்பட்டுள்ளன. உண்மையில், இராணவத்தினர், முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றவில்லை. மாறாக பேரினவாத தமிழ் தலைமைகளே தனி ஈழம், வடக்கு, கிழக்கு விவகாரம் என, விஷம் தரும் விடயங்களை அவர்களது மனத்துக்குள் ஏற்றி பதித்துள்ளனர். இவர்களே முன்னாள் போராளிகளுக்கு தனி ஈழம் என்ற விஷ ஊசியை ஏற்றியுள்ளனர்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளிடமே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X