Nirosh / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
சுமார் மூன்றரை வருடங்களாக மாகாண சபைகள் அழிந்துபோய் இருப்பதற்கு காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றஞ்சாட்டினார்.
வட மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட செயற்பாடே, இதுவரையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமைக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை, தென் எருவில்பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், “உங்களுக்கு வீடு - நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வீடமைப்புத் திட்டத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதி, நேற்று (13) வழங்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 33 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “எனது முதலாவது பாராளுமன்ற உரையின்போது, அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமை மட்டுமே எமது கைகளில் உள்ளது. அதனைப் பலப்படுத்தியெடுக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.
“2017ஆம் ஆண்டு மாகாண சபை முறைமையில் வந்த சட்டத்தை சரியாக நடத்தி முடித்திருந்தால், நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழைத்த தவறுதான் மாகாண சபை தேர்தல் தாமதமடைந்ததற்குக் காரணமாகும். ஐம்பதுக்கு ஐம்பது, வட்டாரமுறை என்றெல்லாம் கொண்டுவந்து குழப்பியடித்து, எல்லாவற்றையும் குழப்பிவிட்டனர்.
“வடக்கில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது மீண்டும் அவர் போட்டியிட்டு, முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில், மாகாண சபைத் தேர்தலை சுமந்திரன் தடுத்திருந்தார்.
“சட்டமூலம் வந்தபோதுகூட, தமிழில் அதனை சமர்ப்பிக்கவில்லை என்று கூறியவர் சுமந்திரன். ஆகக்கூடுதலாக ஆங்கில மொழியைப் பயன்படுத்துபவரும் சுமந்திரன் தான். ஆகையால், அவரது உள்ளக அரசியல் காரணமாக அவர் முடிவெடுக்கக்கூடிய ஆட்சியில் இருந்தபோதுகூட, மாகாண சபை முறைமை 3 வருடங்களாக அழிந்துபோய் கிடப்பதற்கு பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்” என்றார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026