2025 மே 19, திங்கட்கிழமை

மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 20 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், தங்களது விசாரணை அறிக்கையை இக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, இவ்வறிக்கையானது நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட மர்ஸூகு தருஸ்மன் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்ட '40,000 வரையிலான பொதுமக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்" என்ற வாதத்தை மறுத்துள்ள பரணகம அறிக்கை, யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் கூட தங்களது நன்மைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்களை அதிகளவில் கொன்றதாகத் தெரிவிக்கின்றது.

சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்டதாக பொதுமக்கள் மீதான விடுதலைப் புலிகளின் ஒட்டுண்ணி நடவடிக்கைகளை, பிரபல்யமான அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, யுத்தத்தின் இறுதி 12 மணித்தியாலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணமாக அமைந்தனர் எனத் தெரிவிக்கின்றது.

இதேவேளை, இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்களின் இறப்பு அதிகரித்ததென்பதை ஏற்றுக் கொள்ளும் அறிக்கை, அதன் காரணமாக 'கணிசமானளவு இறப்புகள்" ஏற்பட்டன எனத் தெரிவிக்கின்றது. எனினும், பொதுமக்களை விடுவிக்காமல் அவர்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியமையாலேயே இது ஏற்பட்டது எனவும் அது மேலும் தெரிவிக்கின்றது.

நீதியரசர் தலைமையிலான இந்தக் குழுவில், சுரஞ்சன வித்தியாரத்ன, திருமதி மனோ இராமநாதன், டபிள்யூ.ஏ.டி இரத்நாயக்க, எச். சுமதிபால ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X