2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

மன்னாருக்கு விசேட அறிவிப்பு

Janu   / 2026 மார்ச் 17 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (17) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலனின் ஏற்பாட்டில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:

"மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க மன்னார் மாவட்டத்தில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது மன்னார் பகுதியில் மீன்பிடி பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்க விரிவாக ஆராயப்பட்டது. இதற்கென மீன்பிடி அதிகாரிகளால் விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெரும்போக அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை விவசாய பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தியாவிலிருந்து அண்மையில் ஒரு எரிபொருள் கப்பல் வந்துள்ளதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளை தவிர்க்க இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளை சரியாக முன்னெடுக்க பொலிஸாரும் அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர். மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன," என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X