2026 மே 02, சனிக்கிழமை

மாகாண சபைத் தேர்தலுக்கு அமைச்சர் கெஹலிய ஆருடம்

Editorial   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கடந்த 3 வருடங்களாக திட்டமிட்டே பிற்போடப்பட்ட மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கான முனைப்புடனே, அமைச்சரைவையில் யோசனை முன்வைக்கப்பட்டது என்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (15) கலந்துகொண்ட போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாரத்துக்கான  அமைச்சரவை கூட்டத்தில், நீண்ட நேரம் விவாதிக்கப்பட்ட விடயமாக இது (மாகாண சபைத் தேர்தல்) அமைந்தது. கூடிய விரைவில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, கட்சித் தலைவர்கள் இது குறித்து இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர், மீண்டுமொரு தடவை அமைச்சரவையில் பத்திரமொன்றை முன்வைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது என்றார். 

'எமது ஆட்சியின் போது தினேஸ் குணவர்தன தலைமையில் விசேட உபகுழுவொன்று அமைத்து, தேர்தல் முறையை மாற்றுவது மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல வருடங்கள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன' என்றார். 

ஆனால்  2015ஆம் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாகவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதனால், உள்ளுராட்சி தேர்தலை 2 வருடங்கள் பிற்போடவும் நேர்ந்தது என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு தேர்தலை பிற்போடுவதற்கான தேவையிருந்தது. இதற்காகவே சகல விடயங்களையும் பயன்படுத்தி தேர்தலை பிற்போட பாரிய முயற்சிகளை முன்னெடுத்தனர். மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான ஒழுங்குப்பத்திரத்தையே செயற்படுத்த முயன்றனர் என்றார். 

நல்லாட்சி காலத்தில் தேர்தலுக்கு முகங்கொடுக்க பயந்ததால், சாதாரண காரணங்கள் எதுவுமின்றி, அவர்களது அதிகாரம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதனை செய்தனர். மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தியிருக்க வேண்டும். உரிய நேரத்தில் தேர்தலை வைக்க வேண்டுமே தவிர அதனை பிற்போடுவது அல்ல என்றார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கம் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவது அவசியமா என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய,

' கட்சித் தலைவர்களுடன் கலந்துயைராடுவது மிகவும் அவசியமாகும். காரணம் நாட்டின் முக்கிய தேர்தல் தொடர்பில் எடுக்கப்படுகின்ற முடிவாகும்.;  13ஆவது திருத்தம், மற்றும் இன்னொரு நாட்டுடனான இணக்கப்பாடு இதனுடன் தொடர்புட்டுள்ளதால், இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் நாடாளுமன்றம் மட்டுமல்ல ஏனைய கட்சிகளினதும் அபிப்ராயத்தைப் பெற வேண்டுமென்பது தனது தனிப்பட்ட அபிப்ராயம்' என்றார்.
'நாம் உரிய காலத்துக்கு முன்னதே தேர்தலை நடத்தினோம் என்ற குற்றச்சாட்டு எம்மீதே உள்ளதே தவிர, தேர்தலை பிற்போட்டோம் என்ற குற்றச்சாட்டு பொதுஜன பெரமுன மீது சுமத்தப்படவில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .