2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மேகவெடிப்பால் பெருவெள்ளம்; 100க்கும் மேற்பட்டோர் மாயம்

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (05)  அன்று  மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், கங்கோத்ரி பகுதியில் செவ்வாய்க்கிழமை (05) பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்துள்ளது.

இதில் ஒட்டுமொத்த கிராமமும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை மற்றும் பொலிஸ் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மோடி ஆறுதல்: பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு நிலைவரங்களை கேட்டறிந்துள்ளார். 

 

மீட்புப் பணியில் கடும் சிரமம்: 

வெள்ள பாதிப்பு குறித்து மீட்புப் படை வீரர்கள் கூறியதாவது: மேகவெடிப்பால் கீர் கங்கா நதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, தரளி கிராமம் முழுமையாக அழிந்துள்ளது.

 சுமார் 43 கி.மீ. வேகத்தில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்திருக்கிறது. 

இதனால் சில நிமிடங்களில் ஒட்டுமொத்த கிராமமும் அழிந்துவிட்டது. வெள்ளம் வடிந்துள்ள நிலையில், 30 அடி உயரத்துக்கு சகதி தேங்கியுள்ளது.

இந்த சகதியில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.  இது மிகவும் சவாலான பணியாக உள்ளது. வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் இருந்த இடமே தெரியாமல் சகதி மேடாக மாறியிருக்கிறது. 

தரளியில் மிகப்பெரிய சந்தை செயல்பட்டு வந்தது. அந்த சந்தை இருந்த இடமே தெரியவில்லை. சுமார் 13.4 ஏக்கர் பரப்பளவில் இருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன.

தரலி கிராமத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும் சிரமங்களுக்கு நடுவே மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறோம். இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு மீட்புப் படை வீரர்கள் தெரிவித்தனர்.

முன்னைய செய்தி

மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியது (வீடியோ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X