Freelancer / 2026 மே 01 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.
பௌர்ணமி தின விடுமுறை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள மாற்றங்கள், மே தினக் கூட்டங்களைச் சீர்குலைப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம் என அவர் குற்றம் சுமத்தினார்.
குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணி நுவரெலியாவில் நடத்தும் கூட்டத்திற்காகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 முதல் 400 ரூபா வரை வழங்கி, அவர்களை ஏமாற்றி அழைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான போலித்தனமான அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மே தினத்தில் கொழும்பு, கேம்பல் மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்தும் என்று அவர் சவால் விடுத்தார்.
இக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இதற்காகத் தாம் ஏற்கனவே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று மக்களைத் திரட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் மக்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள் என்பதில் தமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தமது கட்சியானது 1974ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஜனாதிபதிகளை உருவாக்கிய நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டிய சாமர சம்பத், அரசாங்கத்தின் மிரட்டல்களுக்குத் தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றார்.
மே தின மேடையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சுமார் 25 முதல் 30 வரையிலான அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுப்பார்கள் என்றும் உண்மையான மக்கள் எழுச்சி எது என்பதை அன்று அரசாங்கம் புரிந்துகொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (a)
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago