2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

ரஷ்ய மருத்துவரிடம் கைவரிசை : சீன நாட்டவர் கைது

Janu   / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தினுள், ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை குடியேற்ற மருத்துவரிடம் 31 இலட்சம் ரூபாய் பெறுமதியான 9,900 அமெரிக்க டாலர்களை திருடிய சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வியாழக்கிழமை (30) அன்று கொழும்பு, கோட்டையிலுள்ள கேசினோ (சூதாட்ட விடுதி) ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EY-394 என்ற விமானம், வியாழக்கிழமை (30) அதிகாலை அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணித்த ரஷ்ய மருத்துவர், பயணத்தின் போது உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில், அவரது கைப்பையை மேலேயுள்ள பொதி வைக்கும் தட்டில் (Hand baggage rack) வைத்திருந்த நிலையில் சீன நாட்டவர் சூட்சுமமாக அதிலிருந்த பணத்தை திருடியுள்ளார்.

விமானத்தில் இருந்து இறங்கிய ரஷ்ய மருத்துவர், தனது கைப்பையில் பணம் குறைவாக இருப்பதை உணர்ந்து, அதிகாலை 04.00 மணியளவில் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், விமான நிலைய பாதுகாப்பு கமெரா (CCTV) காட்சிகளை சோதித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் பயணித்த ஒரேயொரு சீன நாட்டவர் இவராவார். அவர் பாதுகாப்பு கமெராக்களில் சிக்காமல் மிகவும் விரைவாக விமான நிலையத்தை விட்டு வெளியேறி, அங்கிருந்த வாடகை வாகனமொன்றில் (Taxi) ஏறித் தப்பிச் செல்வதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, குறித்த வாடகை வாகன சேவை நிலையத்தின் ஊடாக அவர் எங்கு சென்றார் என்பது கண்டறியப்பட்டது. அவர் கொழும்பு, கோட்டையிலுள்ள கேசினோ ஒன்றிற்குச் சென்றதை உறுதி செய்த பொலிஸார், அங்குள்ள பாதுகாப்பு கமெராக்களை பரிசோதித்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்படும் நேரத்தில், அவர் திருடிய பணத்திலிருந்து 4,000 அமெரிக்க டாலர்களை சூதாட்டத்திற்காக செலவிட்டிருந்தார். அவரிடமிருந்து எஞ்சியிருந்த 18,85,640 ரூபாய் பெறுமதியான 5,900 அமெரிக்க டாலர்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 49 வயதுடைய சீன நாட்டவர், வௌ்ளிக்கிழமை (05) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

டி.கே.ஜி. கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .