2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வடக்கில் 5,941ஏக்கர் காணிகளை அபகரிக்க வர்த்தமானி

Editorial   / 2025 மே 04 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்


வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானி ஒன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறித்த வர்த்தமானியை மீள வாங்காமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள கூடாது எனவும் அவர் இதன்போது மிகக்கடுமையாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இல்லத்தில் 02.05.2025  குறித்த வர்தமானி  மூலமான காணி அபகரிப்புத் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும், அதை எதிர்கொள்வதற்கான சட்ட ஆலோசனைகள் தொடர்பிலும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினரால் மக்களுக்கு தடதெளிவூட்டப்பட்டது.

இந்நிலையில் குறித்த தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்குரிய 5,941ஏக்கர் கரையோரப் பகுதி காணிகளை அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 28.03.2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறித்த காணி அபகரிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, வலைஞர்மடம் உள்ளிட்ட பல்வேறு கரையோரப் பகுதிகளில் மொத்தம் 1,703ஏக்கர் காணிகள் அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,669ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515ஏக்கர் காணிகளும், மன்னாரில் 54ஏக்கர் காணிகளையும் அபகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதுடன், தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் குறித்த வர்த்தமானியை இலங்கை அரசு மீளக் வாங்குவதற்குரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருகட்டமாக 02.04.2025 இரவுச முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது இல்லத்தில் குறித்த காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்கள் மக்களுக்குத் தெளிவூட்டப்பட்டதுடன், சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளக்கை வாங்காமல், அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றோம்.

அத்தோடு தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த நிலங்களை ஒரு நொடியில் அரசநிலங்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடே இந்த வர்த்தமானி அறிவித்தலாகும்.

இவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலின்  மூலம் ஆக்கிரமிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காணிகள் உள்ள தமிழ் மக்கள் உடனடியாக தமது காணிகளை உரிமை கோர வேண்டும்.

குறித்த பகுதிகளில் காணிகள் உள்ளவர்கள் புலம்பெயர்ந்திருப்பின் உடனடியாக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து அக்காணிகளை உரிமை கோர வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருகை தருவது கடினமாக இருப்பின், உடனடியாக அந்த காணி உரிமையை இங்குள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு தமிழ் இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது.

அதேவேளை பெறும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். குறிப்பாக பெறும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவிலும் அகதிகளாக தங்கியுள்ளனர். இவ்வாறு இங்குள்ள தமிழ் மக்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.

இத்தகைய சூழல்கள் இருக்கும்போது தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இவ்வாறு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இந்த வர்த்தமானியை மீளப்பெறவேண்டும்  நீதிமன்றை நாடவுள்ளோம்.

மேலும் அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்கஇவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை  அரசகாணிகளாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டு, கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலே 40ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளார் - என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X