2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வனப் பிரதேசத்தை ‘32% அதிகரிக்க திட்டம்’

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் இலங்கையிலுள்ள வனப் பிரதேசத்தை  32சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற “பசுமை ஆனந்தா” எனும்  நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“சுற்றாடல் பாதுகாப்பு, சக்திவலு பயன்பாடு மற்றும் சுற்றாடல் பொறுப்புகள் தொடர்பாக இன்று அரச தலைவர்கள் முதல் அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் பரிஸ் ஒப்பந்தம் குறித்து பேசினோம். ஐக்கிய நாடுகள் சபை கடந்த வருடம் அரச தலைவர்களை பரிஸ் அழைத்து காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கு அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவுபடுத்தியது. பரிஸில் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் மூன்று மாத காலப் பகுதியில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் அனைத்து அரச தலைவர்களையும் அழைத்து அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது.

தற்போது நாட்டில் மழை பெய்து வருகிறது. இன்னும் நாட்டில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்தே காணப்படுகின்றது.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திலும் அநுராதபுரம் கலாவெவயிலும் சுமார் ஐம்பது சதவீத நீர் உள்ளது. உள்ஹிட்டிய நீர் தேக்கத்தில் 96 சதவீத நீர் உள்ளது. ஏனைய நீர்த்தேக்கங்களான கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ராஜாங்கனை, சேனநாயக்க சமுத்திரம், கந்தளாய் மின்னேரியா போன்ற நீர்த்தேக்கங்களிலும் குறைந்தளவே நீர் உள்ளது. எனவே, மழை எமது விவசாய உற்பத்திகளுக்கு சவாலாக உள்ளது” என்றார்.

“ஜனாதிபதி மாளிகையில் நான் வசிப்பதாக இருந்தால் ஒரு மாதத்துக்கு 150 இலட்சத்துக்கும் அதிகம் நீருக்காகவும் மின்சாரத்துக்காகவும் செலவாகும். நான் அங்கு இல்லாதபோதும் ஜனாதிபதி மாளிகையில் மின்சாரத்துக்காக சுமார் 25, 30 இலட்சம் ரூபாய் செலவாகிறது. அங்கு அதிகம் செலவாவது அங்குள்ள நிலக்கீழ் மாளிகைக்கேயாகும். நான் தற்போது இருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு ரஞ்சித் சியாம்பலப்பிட்டியவின் உதவியுடன் சூரிய சக்தியை பெற்றுக்கொண்டுள்ளேன்.

இன்று இலங்கையில் சுற்றாடல் நிலையை கவனத்திற்கொள்ளும்போது வன பிரதேசம் 27 சதவீதமாக உள்ளது. நான் சுற்றாடல்துறை அமைச்சர் என்றவகையில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் அதனை 32 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளேன். நான் இன்று சுற்றாடல் பாதுகாப்பில் முப்படையினரையும் ஈடுபடுத்தியுள்ளேன்.

மேலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு அதிகார சபை போன்ற அனைத்து நிறுவனங்களினதும் சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X