2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய தீவிரம்

Editorial   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கரூரில் கடந்த செப்.27-ம் திகதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகள் மற்றும் சாலை பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் கடந்த 3-ம் திகதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கரூரில் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த கட்சித் தலை வரும், பிற நிர்வாகிகளும் தங்களுக்கும், நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல நடந்துகொண்டுள்ளனர்.

 

நெரிசலில் சிக்கியவர்களுக்கோ, தங்களது ஆதரவாளர்களுக்கோ அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலோ, ஆறுதலோ தெரிவிக்கவில்லை. பொறுப்பற்ற முறையில் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றது கடும் கண்டனத்துக்குரியது.

 

குறைந்தபட்சம் தன்னை பார்க்க வந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரத்துக்கு விஜய் சமூக வலைதளத்திலாவது உடனடியாக தனது அனுதாபம், வருத்தத்தை கட்சி சார்பில் தெரிவித்திருக்கலாம். அவர்களது இந்த பொறுப்பற்ற செயல்பாடு, மனித உயிர்களை குறைவாக மதிப்பிடும் ஆபத்தான அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது

 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கிறேன். விஜய் பயணம் செய்த பிரச்சாரப் பேருந்தின் உள்ளே, வெளியே மற்றும் சம்பவ இடத்தில் இருந்த அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணையை இந்த குழு உடனே தொடங்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தார்.

இதையடுத்து, விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை பனையூரில் நிறுத்தப்பட்டுள்ள அந்த வாகனம் எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யப்படலாம் என தெரிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X