2026 மே 09, சனிக்கிழமை

dd

’வேலையின்மை விரிவடைதல் சமூகத்துக்கு சிக்கலாகும்’

Editorial   / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் நிலைவரம், உலகில் வேலையின்மையை விரிவடையச் செய்துள்ளமையால், நமது சமூகத்துக்கும் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

'இலங்கையில், இலவசக் கல்வி மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி எனும் விதிமுறை நடைமுறையில் உள்ளமையால், தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை மிக உயர்ந்த கல்வியறிவு வீதத்தைக் கொண்டுள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், ஊடக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 'வறுமை நீடிக்கும் சில கிராமங்களில்கூட, உள்ளூர் அதிகாரிகள், தத்தமது பிரதேசங்களிலுள்ள குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்து, அனைத்துக் குழந்தைகளையும் பாடசாலைக்கு அனுப்பி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில், வயது வந்தோரின் கல்வியறிவு 2017ஆம் ஆண்டு 93.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது, உலக மற்றும் பிராந்திய தரவுகளின்படி, சராசரியை விட அதிகமானதாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வளவு உயர்ந்த கல்வியறிவு சதவீதத்துடன், இளைஞர்களுக்கு இடையே அதிக வேலையின்மை காணப்படுவது, ஒரு பாரிய பிரச்சினையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

'நாட்டின் 21.6 மில்லியன் சனத்தொகையில், 4.4 சதவீதமான இளைஞர்கள் உள்ளடங்குகின்றனர். இது, நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதமாகும். இந்நிலையில், இளைஞர்களின் வேலையின்மை, 20.8 சதவீதமாகக் காணப்படுகின்றது. இது, வளர்ந்து வரும் நாடான்றில் இருக்கும் வேலையின்மையின் சதவீதத்தில் உயர்ந்தத் தொகையாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

'இலங்கையில் வேலையின்மைக்கு, நம்பத்தகாத எதிர்பார்ப்புகளும் அரசாங்க வேலைவாய்ப்புகளுக்கு வரிசையில் இருப்பதும் கடுமையான வேலைப் பாதுகாப்பு விதிமுறைகள் இருப்பதுமே காரணமாகும். பல வருடங்களாக, அடுத்தடுத்த அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயன்று வருகின்ற போதிலும், திறமையான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது' எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .