2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘ஆட்சிக் கவிழ்ப்பு கனவு பலிக்காது

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஷ்ணா, வடிவேல் சக்திவேல்

‘புதிய அரசியலமைப்பின் ஊடாக, நாட்டைக் கூறுபோட முனைகின்றனர்; நாடே நிர்மூலமாகப்போகிறது; வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து நாட்டை பிரிப்பதற்கான சதி இடம்பெறுகிறது’ என பல பொய்களைக் கூறி, நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு பலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். அக்கனவு ஒருபோதும் நனவாகாது என்பதுடன், நாட்டைப் பிரிக்கப்போவதான பிரசாரம் பொய்க்கதையாகும்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

‘நாட்டைப் பிரிக்காமல், ஒரே நாட்டுக்குள் தீர்வைப் பெறவேண்டும். அதற்காகத்தான், புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டு போகின்றோம்’ என, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறினார். அந்த உன்னதமான நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம், அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதியை, நேற்று புதன்கிழமை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக மாகாண சபைகளை ஏற்படுத்துவதற்கான, சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்வதாயின், விசா எடுக்க வேண்டும் என பிரசாரம் செய்தனர். அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.   

நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்ற நம்பிக்கையுடனேயே, ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்தார்கள். அதிலும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னைப் பூரணமாக ஆதரித்தார்கள்.   

நீண்ட கால யுத்தத்தின் காரணமாக வடக்கு- கிழக்கு மாகாண மக்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்தார்கள். யுத்தத்தின் காரணமாக, இவ்விரு மாகாண மக்கள் மட்டுமன்றி, முழு நாட்டிலும் வாழ்ந்த மக்கள் பல்வேறான கஷ்டங்களை அனுபவித்துவந்தனர். அத்துடன் அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்தனர்.   

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும், சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழக் கூடிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில், மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதவாறு, அரசாங்கம் செயற்படவேண்டும். அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.   

நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் அமைதி, சமாதானம் மற்றுமு; நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றோம்.  

அந்த புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் தவறாக பேசுகின்றனர். அது முற்றிலும் தவறானதாகும். நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு யோசனையும் புதிய அரசியலமைப்பில் இல்லை.   

நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டுக்குள் தீர்வை பெறவேண்டும். அதற்காகத்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி கொண்டு போகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியிருந்தார். அந்த உன்னதமான நோக்கத்தை அடைவதற்காக, அரசாங்கம் என்ற வகையிலே அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றோம்.  

புதிய அரசியலமைப்புத் தொடர்பிலான அடிப்படை விடயங்களை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முடிப்பதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.   

இந்நாட்டில் வாழுகின்ற அனைவரையும் ஒன்று படுத்துகின்ற, ஒரே நாடாக ஆக்குவதற்காகத்தான் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். அபிவிருத்தியடைந்த, பொருளாதார மேம்பாட்டைக் கொண்ட நாடாக கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X