2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘இராணுவம் இடையூறு’

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் காணப்படும் அதீத இராணுவப் பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளமையால், அங்குள்ள மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.   கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. 

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் இச்சந்திப்பின் போது எடுத்துரைத்தார். 

வடக்கில் காணப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பிலும் அமைச்சரை விளக்கிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பொது மக்களின் காணிகள் விடுப்பில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்களை விவரித்ததோடு இந்த காணி விடுவிப்புகள் இன்னும் துரிதகதியில் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப் போல தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், கடந்த காலங்களில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின்போது பிரித்தானியா ஆற்றிய பங்களிப்பை வரவேற்றதோடு தொடர்ந்தும் அத்தகைய பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தி கூறினார். 

அரசியல்யாப்பு உருவாக்கம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கும் என இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார் என்றும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .