2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'குண்டுத் துகள்கள், துண்டுகள் உடலில் இருந்தால் அறிவிக்கவும்'

Kanagaraj   / 2016 ஜூன் 09 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இரு பக்கங்களினாலும் பயன்படுத்தப்பட்ட குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ரவைகளின் துகள்கள், துண்டுகள் என்பன உடல்களில் இருக்குமாயின், அவை தொடர்பில் அறிக்கையிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

யுத்தத்தின் நடுவே மக்கள் சிக்கி காயமடைந்தனர் என்பது உண்மைதான். ஆனால், உடல்களில் குண்டுகளின் துகள்கள், துண்டுகள் இருக்குமென சந்தேகம் ஏற்பட்டால், அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமையன்று பிரதமரிடம் கேள்விகளை கேட்பதற்கான நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுகளினால், குண்டுகளின் இரசாயனத் துண்டுகள் என்பன, அங்குள்ள மக்களின் உடம்புக்குள் புகுந்துகொண்டுள்ளன. அவற்றை அகற்றுவதற்கு  அரசாங்கத்திடம்

ஏதேனும்  வேலைத்திட்டங்கள்  இருக்கின்றனவா என்று  வினவினர்.

இக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'வடக்கு - கிழக்கில், யுத்தம் இடம்பெற்ற போதல்ல, இறுதி யுத்தத்தின் போதும் மக்கள் பெரும் துன்பப்பட்டனர். மோட்டார் குண்டுத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள், எம்மால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களால், சாதாரண மக்கள் துன்பப்பட்டனர். இது இங்குமட்டுமல்ல, சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் அரச படைகளுக்கும் பயங்கரவாதப் படைகளுக்கும் இடையில் சிக்கிக்கொள்கின்ற சாதாரண பொதுமக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர், பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

அத்துடன், 'உடல்களில், இரசாயன துகள்கள் இருக்கின்றமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையெதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறான சந்தேகம் ஏற்படுமாயின், அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தேவையேற்படின், இந்த விவகாரம் தொடர்பில், சுகாதார அமைச்சர், சிறைச்சாலைகள் அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை எடுக்கலாம்' என்றும் பிரதமர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .