2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'நம்பிக்கையில்லா பிரேரணை வந்தாலும் ரணிலுக்கே ஆதரவு'

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“கோப் குழுவின் அறிக்கையில் எந்த இடத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மத்திய வங்கி பிரதமரின் கீழுள்ள அமைச்சின் கீழே உள்ளது. அதற்காக அவரையும் இதில் தொடர்புபடுத்துவது சரியானதாக இருக்காது” என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதர அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு,  அரசாங்கத் தகவல்  திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (02) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சியில் ராடா நிறுவனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே பணம் வழங்கினார். சுமார் 600 மில்லியன் ரூபாய் பணம் கைமாறியுள்ளது. அதேபோல கிரிக் பிணைமுறை விவகாரத்திலும் முறைக்​கேடுகள் இடம்பெற்றிருந்தன. அதில்  200 மில்லியன் டொலர் அளவிலான முறைக்கேடுகள் இடம்பெற்றிருந்தனர். அதனை போல பல நிதி முறைக்கேடுகள் இடம்பெற்ற ​போதும், அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அன்றைய நாட்களில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களான நீங்கள் செய்தி எழுதியிருந்தால் லசந்த விக்ரமதுங்கவின் இடத்தில் தான் இருந்திருக்க நேரிட்டிருக்கும். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை.

இதுகுறித்தெல்லாம் பேசாத ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஒரு விரல் எமக்கு எதிராக நீட்டப்படும்போது ஏனைய அனைத்து விரல்களும் அவர்களுக்கு எதிராகவே செயற்படும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பிரதமருக்கு சார்பாகவே செயற்படுவோம்.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையானது, தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், ஊடகங்களில் வெளியிடப்படுவதைப் போல இந்த விவகாரத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. இதனை கோப் குழுவின் தலைவரான சுனில் ஹந்துநெத்தியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கோப் குழுவின் முன்னாள் தலைவரான டியு.குணசேகரவினால் வெளியிடப்பட்ட மத்திய வங்கி விவகாரம் தொடர்பிலான இடைக்கால அறிக்கையில் கூட பிரதமருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .