2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“நிதிமோசடியை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்”

George   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஊழல், மோசடி குறித்தான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, விசேட நீதிமன்றமொன்றை நிறுவ வேண்டும்” என, மக்கள் விடுதலை முன்னணி, கோரிக்கை விடுத்துள்ளது.   
பெலவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று, ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இக்கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,   
 “ஊழல் மோசடி குறித்தான விசாரணைகளை, அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.

இந்த விசாரணையானது, கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களிடம் மாத்திரம் நடத்தாமல், கடந்த அரசாங்கத்திலிருந்து தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட அமைச்சர்களிடமும் முன்னெடுக்க வேண்டும்.  

இலஞ்ச, ஊழல் தொடர்பிலான வழக்குடன் தொடர்புடைய தற்போதைய அமைச்சர்கள் குறித்து, நாங்களும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனாலும், அதற்கான விசாரணைகள் அரசியல் காரணங்களுக்காகப் பிற்போடப்பட்ட வண்ணம் உள்ளன. குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு, தனிப்பட்ட ரீதியாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. சுயாதீன விசாரணை ஆணைக்குழு என்ற போதிலும், சுயாதீனமான முறையில் விசாரணைகளை நடத்துவதில் பல அரசியல் தலையீடுகள் ஏற்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. யார் அந்த தலையீடுகளைச் செய்வது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.   

குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளைச் செய்வதற்கென, ஒரு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். குறித்த வழக்குகளை சாதாரண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதானால், மற்றைய வழக்குகளும் பிற்போடப்படுவதுடன், குறித்த விசாரணைகளும் பிற்போடப்படுகின்றன. எனவே, தவறுகள் யார் இழைத்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .