2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

20 எம்.பிக்களுக்கு எதிராக சபையில் யோசனை; பின்னர் வழக்கு

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றத்துக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, அடுத்து வரும் சபை அமர்வின் போது, யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், மேற்படி யோசனையானது, மனுவொன்றாகச் சமர்ப்பிக்கப்பட உள்ளதென, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.  

கடந்த, வருடம் நவம்பர் மாதத்தின் 15, 16, 17ஆம் திகதிகளில், நாடாளுமன்றத்துக்குள் இடம்பெற்ற அமைதியற்ற நிலை​மைகள் குறித்த விசாரணைகளை நடத்துவதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரியவால், விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டு இருந்தது.  

பிரதி சபாநாயகர் தலைமையிலான இந்தக் குழுவில், ஆளும், எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.  

இந்தக் குழுவானது, சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக, காணொளிப் பதிவுகள், சாட்சியங்களைக் கொண்டு, உரிய விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையைத் தயாரித்து முடித்துள்ளது.  

இந்நிலையில், வெளிநாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர், நாடு திரும்பியவுடன், அவரிடம் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. பின்னர், சபாநாயகரால் அந்த அறிக்கை, சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.  

இதன்போது, மேற்படி தினங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கலகத்தில் ஈடுபட்டமை, நாடாளுமன்றச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அவ்வாறு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியுமா என்பது தொடர்பில், சபாநாயகரால், சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.  

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யலாமென, சட்ட மா அதிபர் தெரிவிக்கும் பட்சத்தில், அது தொடர்பான யோசனையொன்று, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்வதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும், அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே, வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, மேற்படி மோதல் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற உகரணங்களுக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையும், மதிப்பீட்டுத் திணைக்களத்தால், மேற்படி விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .