Niroshini / 2021 மே 13 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெவ்வேறான வகையைச் சேர்ந்த கொரோனா தடுப்பூசிகளைக் கலந்து (Mix and Match) ஏற்றுவதற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து, இதுவரை பரிந்துரையோ அனுமதியோ கிடைக்கப்பெறவில்லை என, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளில், எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படலாமெனவும் ஆனால், முதலாவதாக ஏற்றப்பட்ட தடுப்பூசி வகையையே 2ஆவதாகவும் ஏற்றப்பட வேண்டுமென்றே உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.
தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் அடிப்படையில், கொவிட்19க்கு எதிரான தடுப்பூசிகளைக் கலந்து ஏற்ற முடியும் என்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றுத் அது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிபடக் கூறிய பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இதேவேளை, நாட்டுக்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், உட்கட்டமைப்பு வசதிகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதாரச் சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, இந்தப் புதிய அலையின் மாற்றத்துடன், தொற்று தீவிரமாகப் பரவும் என்பதுடன் மேலும் பல சிக்கல்களும் ஒட்சிசனுக்கான தேவையும் அதிகம் இருக்கும் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர், “அவசர சிகிச்சைப் பிரிவில் உள்வாங்கக் கூடியவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க, தொற்றாளர்களின் அதிகரிப்பு காணப்படுகிறது. இதனால், பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது மிக மிக அவசியம்” என்றார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில், ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளனவெனவும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி, தற்போது 11 ஆயிரம் இலங்கையர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதெனவும் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் 15ஆம் திகதியிலிருந்தே, கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதுடன், முந்தைய அலைகளை விட இம்முறை இது மிகவும் தீவிரமாகப் பரவி வருவதாகவும் இதற்கான காரணம் வைரஸின் தன்மை, அதன் மாற்றங்களே ஆகுமென்றார்.
“இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரம் தனித்துவமானதல்ல. இது, முழு உலகமும் எதிர்கொள்ளும் பிரச்சினை. இந்தத் தொற்றின் புதிய திரிபு இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்தப் புதிய திரிபால், நேற்று முன்தினம் (11) வரை 31,616 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“எனவே, அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிவது அவசியம். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தேவையில்லாமல் கூடியிருக்கும் இடங்களைத் தவிர்த்தல், கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவுதல், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல் போன்றவற்றால் வைரஸிலிருந்து பாதுகாப்பைப் றலாம்.
“அத்துடன், இத்தொற்று இளையோரை விட முதியோர்களை அதிகம் தாக்குகிறது. கொரோனா மூன்றாவது அலையால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் வயதானவர்களாவர். எனவே இசந்தர்ப்பத்தில் முதியவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
“மேலும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலில், பொதுமக்களுள் பலர் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளனர். பண்டிகைக் காலத்தில் மக்களின் பொறுப்பற்ற செயல் காரணமாக, நாடு தற்சமயம் இக்கட்டான நிலையில் இருக்கின்றது.
“தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, தற்போது வரை வெற்றிகரமாக முன்னெடுக்கபடுகிறது. பைஸர் தடுப்பூசிக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து வெகுவிரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனை இலங்கையர்களுக்கு ஏற்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
“எனினும், தடுப்பூசி ஏற்றப்பட்டவுடனேயே முடிவுகள் எதுவும் கிடைத்துவிடாது. இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே இதற்கான பலன் கிடைக்கும். தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களும் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியம்” என, இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago