2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

'முகாமுக்காக காணிகளை வழங்கிய விவசாயிகளுக்கு மாற்றுக்காணிகள் வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

சம்பூர் பாடசாலை வளாகத்தில் அமைத்திருந்த  விதுர கடற்படை முகாம் அருகிலிருந்த காணிக்கு மாற்றப்பட்டபோது, அம்முகாமுக்காகச் சொந்தக் காணிகளை வழங்கிய 22 விவசாயிகளுக்கு மாற்றுக்காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஆகவே, இவ்விவசாயிகளுக்கு துரிதகதியில் மாற்றுக்காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், இந்த முகாமுக்கு அருகிலுள்ள காணிகள் சில விடுவிக்கப்படும் சூழ்நிலையிலிருந்தும், அவையும் விடுவிக்கப்படவில்லை. அக்காணிகளும்; விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சம்பூர் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் அங்கு சனிக்கிழமை (17) கூட்டம் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'சம்பூரில் சுமார் 200 நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள 906 குடும்பங்களுக்கும்  கடற்கரைச்சேனையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள 28 குடும்பங்களுக்கும் வீட்டு வசதி தேவைப்படுகின்றது. ஆகக்குறைந்தது  700 வீடுகள் தேவையாகவுள்ளன என்பதை மாவட்டச் செயலாளருக்கும் இம்மாகாண ஆளுநருக்கும் தெரியப்படுத்துவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்' என்றார்.  

'இது மாத்திரமன்றி, சம்பூர் மக்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட  வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்புத்; தேவையாகும். குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரத்திட்டத்துக்கு வழி செய்யப்பட வேண்டும்.  
வன இலாக அதிகாரிகளின் கெடுபிடி காரணமாகத் தங்களின் காணிகளை துப்புரவு செய்ய முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். இவ்விடயத்தில் தளர்வை ஏற்படுத்தி, விவசாயிகள்; காணிகளைத் துப்புரவு செய்து வாழ்வாதாரத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இங்கு காணப்படும் 52 குளங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .