2025 மே 02, வெள்ளிக்கிழமை

’உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தலில் விவசாயிகள் நன்மையடைவர்’

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எஸ்.எம்.றனீஸ் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல் எனும் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்படும் திட்டங்களால் விவசாயிகள் பெரிதும் நன்மையடைவர் என திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் அதிகளவான பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்மூலமாக கடந்த காலங்களிலும் பார்க்க அதிகமான விளைச்சல் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்,  மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (23) நடைபெற்றது. இதன்போதே, திருகோணமலை மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அத்துடன், அரசாங்கத்தினுடைய நெல் கொள்வனவு செயல் திட்டத்தின் மூலமாக நெற்களுக்கு உயரிய விலை கிடைக்க பெற்றதாகவும்  திருகோணமலை மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான அனைத்துப் பிரதேசங்களிலும் பயிர்ச்செய்கையை  மேற்கொண்டு, மாவட்டத்துக்கு அவசியமான உற்பத்திகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலதிக உற்பத்திகளை ஏனைய மாவட்டங்களுக்கும் அதேபோன்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கிவருவதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் நீர்ப்பாசன செழுமைத் திட்டத்தின் கீழ், 12 குளங்களின் புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட குளங்களின்  வேலைகள் எதிர்வருகின்ற தினங்களில் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன்மூலமாக விவசாயிகள் நீர் பிரச்சினையின்றி தங்களுடைய உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட உரமானியம், பெரும்போகத்தில் 48,914 விவசாயிகளுக்கு 16,609 மெட்ரிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் (உர விநியோகம்) பிரேமரத்ன தெரிவித்தார்.

சிறுபோகத்துக்கு அவசியமான உரம் களஞ்சியங்களில் காணப்படுவதாகவும் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் அவற்றை உரிய முறைப்படி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X