2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திருகோணமலை மீனவர்கள் சுதந்திரமான மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்க உத்தரவு

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

மீனவர்களை, சுதந்திரமாகக் கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, திருகோணமலை கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்புக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பலர், கடற்படையினரால் கைது செய்யப்பபட்டதால், தமது அன்றாட தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாம் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய மாவட்ட மீனவர்கள், சுதந்திரமாகத் தமது தொழிலை முன்னெடுக்கின்ற போதும், திருகோணமலை மாவட்ட மீனவர்கள், குறிப்பாக கிண்ணியா, மூதூர், கருமலையூற்று மீனவர்கள், கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது பற்றி, கிண்ணியா நகர சபை உறுப்பினர் ரிஸ்வி, வேட்பாளர் கால்தீன், மீனவ சங்கத் தலைவர் பாயிஸ் உள்ளிட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளால், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவைச் சந்தித்து, இம்ரான் மஹரூப் எம்.பி கலைந்துரையாடியதன் பின்னரே, மீனவர்களைச் சுதந்திரமாகத் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு, திருகோணமலைப் பகுதிக் கடற்படைக்கு, இராஜாங்க அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, மீனவ சங்கப் பிரதிநிதிகளை விரைவில் சந்திப்பதாகவும், இராஜாங்க அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X