2025 மே 05, திங்கட்கிழமை

மணல் அகழ்வால் ‘மகாவலி பொங்கு முகம் அழிவடையும் ஆபத்து’

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மணல் அகழ்வால், மகாவலி பொங்கு முகம் ((Estuary)) அழிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி, அதனைப் பாதுகாக்க, சூழலியலாளர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, செயற்பாட்டாளரும் திருகோணமலை முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினருமான எஸ். நந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று (29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தொடர்பாக அனைவரினதும் கவனமும் ஏற்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

ஆறுகள், கடலுடன் கலக்கும் இடங்களான பொங்கு முகங்களில், உயிர்ப் பல்வகைமை அதிகமாகக் காணப்படுகிறது எனச் சுட்டிக்காட்டிய அவர், ஆறுகள் அள்ளிவரும் வண்டல் மண் படிவுகளால், ஆற்றுக் கரையோரங்கள், பயிர்ச்செய்கைக்கு உகந்த இடங்களாக உள்ளன என்பதையும் ஞாபகப்படுத்தினார்.

“ஆனால், இந்தப் பல்வகை, உயிரியல், இயற்கை விவசாயத்துக்குத் தோதான நிலைமை, தற்போது இடம்பெற்று வரும் இயற்கைச் சூழல் சமநிலையைக் குழப்பும் கேடான நிலைமையால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
“இலங்கையின் மிக நீளமான மகாவலி கங்கை, இறுதியாகக் கடலோடு கலக்கும் இடம், திருக்கோணமலை மாவட்டமாகும்.

“எனினும், பணம் படைத்த தனிநபர்களும் அரசியல் பலம் படைத்த வெளி மாவட்டத்தவர்களும் கனரக வாகனங்களின் உதவியுடன், மகாவலி பொங்கு முகத்தைச் சூழ்ந்த பிரதேசங்களில் மணல் அகழ்வில் ஈடுபட்டு, இயற்கைக்கு நாசம் விளைவிக்கின்றனர்" என்று, எஸ். நந்தன் குற்றஞ்சாட்டினார்.

கிண்ணியா, மூதூர், சேருவில, தெஹிவத்தை, நிலாப்பளை போன்ற இடங்களில், வியாபார நோக்கமாக மணல் அகழ்வில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்த அவர், இதன் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் பிரதேசம், தரிசு நிலமாக மாறும் ஆபத்தை எதிர்கொள்வதோடு, கடல்நீர் வயல் நிலங்களுக்குள் உட்புகும் ஆபத்தும் எதிர்நோக்கப்படுகின்றது என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து அவர், "“மகாவலி பொங்கு முகம்அழிவடையும் போது, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீனினங்கள் அழிவடையும். அதனால், மீன்பிடித் தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களும், தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படும்.

“எனவே, முறையற்ற இம்மணல் அகழ்வைத் தடைசெய்து, இயற்கைச் சூழலைப் பாதுகாக்க சூழலியலாளர்கள் உடன் களத்தில் இறங்குவதோடு, முடியுமானவரை சுற்றாடல் சூழல் சட்டத்தின் கீழ், இத்தகைய பணப்புரள்வு வழியைத் தடை செய்யவும் வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X