Princiya Dixci / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிண்ணியா கண்டல் காடு கிராமத்தின் மின்சார வேலியின் நிர்மாணப் பணிகளை, மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து, நீதிமன்றம் செல்லவுள்ளதாக, மத்திய சுகாதாரப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபைத் தவிசாளருமான எச்.எம்.எம்.பாயீஸ் தெரிவித்தார்.
கண்டல்காடு பிரதேசத்தில் பொது மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கு ஊடாக மீண்டும் மின்சார வேலி அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக இன்று (08) ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மேற்படி கிராமத்தில் யானைகளின் நடமாட்டத்தைத் தவிர்க்கும் வகையில் வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி, மின்சார வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த மின்சார வேலியானது, தமது காணிகளுக்கு ஊடாக அமைக்கப்படுவதாகவும் இதை உடனடியாகத் தடுத்துநிறுத்தி, தமது காணிகளை அடையாளம் காண உதவுமாறும் என்னிடம் தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கமைய வனவள அதிகாரிகளை உரிய பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று அவை மக்களின் உறுதிக் காணி. அக்காணிகள் பிரதேச செயலகத்தால் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்வரை மின்சார வேலி அமைப்பதை நிறுத்துமாறு, குறித்த அதிகாரிகளிடம் நான் கேட்டுக்கொண்டதையடுத்து, மின்சார வேலி அமைக்கும் பணி, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.
30 வருட கால யுத்த சூழ்நிலை காரணமாக இந்தப் பிரதேசத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி கிண்ணியாவின் மத்திய பகுதியில் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்னர்.
இவர்களுடைய காணிகள், தற்போது அடையாளங்காண முடியாதவாறு மரங்கள் வளர்த்து காடாக மாறியுள்ளன. இங்கு இருப்பது உறுதிக் காணிகள். உறுதிக் காணிக்குள் மின்சார வேலியை அமைப்பது சட்ட விரோதமானது. இது முறையற்ற விதத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு சவால் விடுக்கும் நடவடிக்கையாகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தோப்பூரிலிருந்து தம்பலாகமம் வரையும் மக்களின் வயல் காணிகளுக்கு ஊடாக 60 அடி அகலத்தில 60 கிலோமீற்றர் நீளமான வீதி அமைக்கும் பணி நடை பெற்றது. இதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீதிமன்றத்தின் ஊடாக அவற்றைத் தடுத்து நிறுத்தியது. இதனால் கிண்ணியா விவசாயிகளின் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் காணிகள் பாதுகாக்கப்பட்டன.
அதேபோன்றதொரு தடையுத்தரவைப் பெறுவதற்காகவே, இந்த மின்சார வேலி அமைக்கும் பணிக்கு எதிராக, நீதிமன்றம் செல்லவுள்ளேன். இதன்மூலம் மக்கள் தங்கள் காணிகளை அடையாளம் கண்டு, மீள்குடியேறுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
7 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago