2025 மே 19, திங்கட்கிழமை

முஸ்லிம்களின் காணி விவகாரம்: 'வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற நடவடிக்கை'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

'தோப்பூர், செல்வநகர் பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் தொல்பொருட்கள் இல்லை என்பதால், உரிய அதிகாரிகளோடு பேசி, வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன்' என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தோப்பூர், செல்வநகர் பகுதிக்கு, திங்கட்கிழமை (01) இரவு, குடிநீர் இணைப்பை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'குறித்த பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி, அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துக்குச் சொந்தமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காணி விடயம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரியோடு நான் அண்மையில் தொடர்புகொண்டு பேசியபோது, அங்கு தொல்பொருள் எவையும் இல்லையெனத் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற, 2006, 2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்ட தோப்பூர் 10 வீட்டுத்திட்டம், இன்னும் இராணுவ முகாமாகவே இருப்பதாகவும், தாம் தொடர்ந்தும் உறவினர்களினது வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வசித்து வருவதாகவும் அக்காணிச் சொந்தக்காரர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

யுத்தம் நிறைவடைந்திருக்கின்ற படியினால், அவ்விடத்தில் இராணுவ முகாமொன்று தேவையற்றதொன்றாகவே உள்ளது.

சம்பூரிலும், வலிகாமம் வடக்குப் பகுதியிலும் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கரிசனை காட்டி வருகின்ற நிலையில், இந்த 10 வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X