2025 மே 17, சனிக்கிழமை

'இனவாதக் குழுக்கள் குழுப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 25 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

'இந்த நாட்டிலுள்ள பல்வேறு இனவாதக் குழுக்கள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையிலும், சிறுபான்மையின மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்க  ஜனாதிபதி, பிரதமர் மந்திரி மீது   நம்பிக்கை வைத்து செயற்பட்டு வருகின்றோம். மாகாணத்தின் அதிகாரங்களை கூட்டிக்கொள்ள பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றோம்' என  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

'வெற்றிகரமாக இந்த மாகாணத்தில் கூட்டாட்சி நடத்தி பல பாரிய அபிவிருத்தி திட்டங்களை உள்ளீர்க்க செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறு கொண்டுவரப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய திறனை எமது நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் கொண்டிருக்கின்றார்களா என்பதனை  ஆராயவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்' எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண கட்டட ஒப்பந்தக்காரர் ஒன்றிய அங்குரார்ப்பணக் கூட்டம் திருகோணமலை ஜேக்கப் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறனார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இந்த மாகாண நல்லாட்சியை கொண்டுவர முற்பட்டவேளை  பலரும்  பல விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால், இன்று  அதனையெல்லாம் புறம்தள்ளி ஒரு வெற்றிகரமான நல்லாட்சியை முன்மாதிரியான நல்லாட்சியை கொண்டு நடாத்தி வருகின்றோம். இது ஒரு வருடத்துக்கு அல்ல,  இன்னும் பல வருடத்துக்கு தொடரும்.

இந்த நல்லாட்சியினால் நாங்கள் மேற்கொண்ட காய்நகர்த்தலின்  காரணமாக பாரிய பல திட்டங்களையும் அதற்கான நிதிகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களின் பங்குதாரர்களின் கட்டட நிர்மாணத்துறையினரும் ஒரு முக்கியமான பங்குதாரராகும். ஆனாலும், எமது மாகாணத்தில் இவ்வாறான பாரிய கட்டட நிர்மாணங்களை செய்யக்கூடிய நிறுவன மயப்பட்ட அமைப்புக்கள் உள்ளனவா? அவை நவீன மயப்பட்ட கட்டட நிர்மாணங்களைச் செய்யக்கூடிய தொழில் நுட்ப வசதிகளை கொண்டிருக்கின்றனவா?

எமது மாகாணத்தை எடுத்துப்பாருங்கள். நவீன வசதிகளுடன் கூடிய அறிவைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை காணமுடிகிறதா? எல்லாமே பிரித்தானியர் காலத்தில் இருந்து பின்பற்றும் பாரம்பரிய முறையுடனான கட்டங்களாகவே உள்ளன.

அதுவும் எல்லாமே பாடசாலை போன்ற கட்டடங்களாகவே இருக்கின்றன. ஆகவே எமது கட்டட ஒப்பந்த நிறுவனங்கள் தங்களது தராதரத்தை நவீன முறையில் தொழில்நுட்ப ரீதியில் வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
கொழும்பிலே உள்ள பல பாரிய திட்டங்களை முன்னெடுக்கும் கட்டட ஒப்பந்த நிறுவனங்களைப் போன்று ஒரு நிறுவனத்தைக்கூட எமது பகுதியில் காண முடிவதில்லை. எனவே எமது மாகாணத்தின் அபிவிருத்தியில் பங்குதாரராக இருக்க கூடிய நீங்கள்  நவீன கட்டட நிர்மாண சூழலை புரிந்துகொண்டு பல்வேறு நிறுவனங்களுடன் பங்குதார்களாக செயற்பட்டு உங்களின் நிர்மாணத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

எமக்கு அதிகாரங்களை வழங்கினால் நாட்டைப்பிரித்துவிடுவோம் என இனவாதிகள் கூறுகின்றனர். 13ஆவது திருத்தச்சட்டம் மூலம் இந்த நாட்டில் வழங்கப்பட்ட சட்டங்களை அமுல்படுத்தினால் நாடு பிரிந்து விடும் என பிரச்சாரங்களை நாடாளுமன்றத்தில் கூறுகின்றனர். எமது மாகாணத்திற்கான  வெற்றிடங்களை நிரப்புவதற்கு எமது மாகணத்திற்கு அதிகாரமுண்டு. அது 13வது திருத்;தத்தில் உள்ளது. அதனை வழங்கினால் நாடு பிரிந்து விடும் என கூறுகின்றார்கள். ஜனாதிபதி, பிரதமர் நினைத்தால் வெறும் 24 மணித்தியாலங்களில் 13வது திருத்தைத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் அதனை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .