2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘திட்டவரைவு அடிப்படையில் அதிகாரப் பகிர்வு’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், வடமலைராஜ்குமார்

“என்ன கட்டமைப்புக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதை மாத்திரம் தீர்மானிக்கின்ற அதிகாரம், மத்திக்கு இருக்கும் வகையிலும் ஏனைய அதிகாரங்கள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட சகல அதிகாரங்களையும், நாங்கள் தீர்மானிக்கக்கூடிய வகையிலுமே, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அந்தவகையில் தான், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவாரத்தைகள் நடைபெறுகின்றன”  என்று, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

“அரசியல் சாசனத்துக்காக நடைபெறும் சில பல முயற்சிகளைக் குழப்புவதற்கும் இல்லாமல் செய்வதற்கும், திரைமறைவில் பல நடவடிக்கைள் நடைபெற்றுவருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

திருகோணமலை, உவர்மலை விவேகானந்தாக் கல்லுாரியின் தொழில்நுட்பப் பிரிவுக்காக அமைக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல்லை, நேற்றுக் காலை நாட்டிவைத்த பின்னர் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த, இயன்றளவு நாம் முயற்சிக்கின்றோம். இது தொடர்பில், ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துப் பேசியுள்ளேன். இந்த நாட்டினுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாக இருந்தால், இந்த நாட்டுக்கு,புதிய அரசியல் சாசனம் அத்தியாவசியமாகும். அதற்காக, நடைபெறும் சிலபல முயற்சிகளை குழப்புவதற்கும் இல்லாமல் செய்வதற்கும், நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன்மூலம், பிராந்தியங்கள் அல்லது மாகாணங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் ஏற்படுத்தப்படும். சில விடயங்களில், மத்திய அரசாங்கத்துக்கு சில உரித்துகள் இருக்கலாம். பொது விடயங்களில் அது இருக்கலாம். ஆனால், நாளாந்த விடயங்களில் அவ்வாறல்ல. நாட்டின் தராதரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான இந்நடைமுறை, மத்திக்கு இருக்கலாம். அவ்விதமான நிலமையை உருவாக்குவதற்கு “பிறேம் வேர்க் றெஜிஸ்ட்ரேஷன்” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். 

என்ன கட்டமைப்புக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதை மாத்திரம் தீர்மானிக்கின்ற அதிகாரம் மத்திக்கு இருக்கலாம். ஆனால், ஏனைய அதிகாரங்கள் மற்றும் நிர்வாக உள்ளிட்ட சகல அதிகாரங்களையும் நாங்கள் தீர்மானிக்கக்கூடிய நிலமை ஏற்படும். அவ்விதமான கருமங்களை, எங்களுடைய பிரதேசங்களுக்கு உகந்த வகையில், நாங்கள் எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, ஒரு முன்னேற்றகரமானத் தீர்மானங்களை எடுக்க வழிவகைகளைச் செய்ய முடியும். 

எந்தெந்தப் பிராந்தியங்கள் பின்னடைவில் உள்ளன எனக்கண்டறிந்து, அந்தந்தப் பிராந்தியங்களின் தேவைகளின் அடிப்படையில், அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, குறித்த பிராந்தியத்தைச் சார்ந்த அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும். அந்தளவுக்கு அந்த அதிகாரப் பகிர்வை பெறுவோம் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது. அந்தவகையில் தான், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவாரத்தைகள் நடைபெறுகின்றன” என, அவர் மேலும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .