2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 16,501 பேர் பாதிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், எம்.பரீட், அப்துல் சலாம் யாசீம், ஜதுசன்)

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 4,519 குடும்பங்களை சேர்ந்த 16,501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 70 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் 24 மணி நேரத்தில் 161.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

திருகோணமலை கண்டி வீதியில்  95வது மைல் பகுதியிலுள்ள 30 மீற்றர் பாலம் உடைந்ததனhல் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து  தடைப்பட்டுள்ளது.

வெளியிடங்களிலிருந்து வரும் வாகனங்கள் முள்ளிப்பொத்தாணை வரை சேவையில் ஈடுபடுகின்றன.

கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு  வரும் பேரூந்துகள் தம்பள்ளை கெப்பிட்டிகொல்லாவ, புல்மோட்டை வழியாக திருமலைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 78 மணி நேரத்தில் 285.3 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவித்தார்.

வருடாந்த மழைவீழ்ச்சி 1,606 மில்லி மீற்றாக உள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை பிற்பகலுடன் கடந்த 33 நாட்களில் 1,619.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.

வருடாந்த மழை வீழ்ச்சியை ஒரு மாதத்திலும் ஒரு சில நாட்களிலும் அண்மித்தது வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும் என வானிலை அவதான அதிகாரி சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியாக பெய்யும் மழையின் காரணமாக படுவான்கரை மற்றும்  எழுவான்கரைக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு இயந்திர  படகு சேவை நடத்தப்படுகின்றது.

பட்டிருப்பு பாலம் தொடக்கம் போரதீவு வரையான வீதி, போரதீவு தொடக்கம் வெல்லாவெளி வரையான வீதி, வெல்லாவெளி மண்டூர் வீதி, வெல்லாவெளி பாலயடிவட்டை வீதி, ஆதித்தியமலை வீதி, புலி பாய்ந்தகல் வீதி, வலையிறவுப்பால வீதி, சித்தாண்டி பிரதான வீதி ஆகியவற்றுக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .