2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்: பிரான்ஸ் தூதுவரிடம் கிழக்கு முதலமைச்சர்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்ததினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இன்று சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பிரான்ஸ் நாட்டுதூதுவரிடம்; இடம்பெற்ற சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரான்ஸிய தூதுவர் ஜீன் போல் மொன்சூ இன்று திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது முதலமைச்சரின் செயலாளர் ரு.டு.யு.அஸீஸ் மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் பொன். செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்.

தற்போது நாட்டில் சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது நாட்டின் சகல பிரதேசங்களிலும் ஜனநாயக கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன கடந்த காலங்களில் பயங்கரவாத பிரச்சினை காரணமாக ஜனநாயக கட்டமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை காணப்பட்டது இன்று அவ்வாறான நிலை முற்றாக மாற்றப்பட்டு நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்களின் ஆட்சி நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது இதற்கு வடக்கு மாகாண சபை தேர்தல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தற்போது நாடு அடைந்திருக்கும் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் இல்லாமல் செய்து மீண்டும் பயங்கரவாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் முயன்று வருகின்றன. அவ்வாறான சக்திகள் மனித உரிமை மீறப்படுவதாகவும், போர் குற்றம் நிகழ்த்தியதாகவும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் சர்வதேச விசாரணை என்ற தந்துரோபாயங்களை பயன்படுத்தி இலங்கையை சர்வதேசத்தில் குற்றம் புரிந்த நாடாக அடையாளப்படுத்த முயற்சித்து வருகின்றார்கள்.

எனவே மக்கள் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் பலமான ஜனநாக நாட்டின் தூதுவர் என்ற அடிப்படையில் இங்குள்ள யதார்த்த நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்படுவதோடு அதனை சர்வதேச சமூகத்திற்கும் உரிய முறையில் வெளிப்படுத்துவீர்கள் என நம்புகின்றோம்.
நீங்கள் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்து வருகின்றீர்கள் இந்த விஜயத்தின் போது இங்கு இடம்பெற்று வருகின்ற அபிவிருத்திகளையும், செயற்பாடுகளையும் அவதானித்திருப்பீர்கள் எனவே, உங்களுடைய கருத்துக்களையும் ஆதரவையும் எமது நாட்டுக்கு வழங்குவதோடு ஜெனீவா மாகாநாட்டில் எமது நாட்டுக்கு ஆதரவாக பிரான்ஸ் செயற்பட வேண்டும் அதற்கான செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

பிரான்ஸ் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும், அணுகுமுறைகளையும் எமது நாட்டுக்கு வழங்குவதோடு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் தொடர வேண்டும் அதற்கு உங்களுடைய செயற்பாடு முக்கியமானது.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் அவிருத்திகளுக்கு பிரான்ஸ் உதவியளித்து வருவதை நினைவுபடுத்திய முதலமைச்சர்; மீண்டும் கிழக்கு மக்களின் அபிவிருத்திக்கு பிரான்ஸின் உதவி இன்றியமையாதது என பிரான்ஸிய தூதுபர் ஜீன் போல் மொன்சூரிடம் இடம்பெற்ற சந்திப்பின் போது முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தொடர்ந்து குறிப்பிடுகையில் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X