2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜூலை 02 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணி வளப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரிக்கை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மூதூரில் பேரணியொன்று இடம்பெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இப்பேரணி மூதூர் எரிபொருள் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பித்து தள வைத்தியசாலை வரை சென்றது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் வைத்தியசாலைக்குத் தேவையான ஆளணியினரை பெற்றுத் தருமாறும் போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் எழுதப்பட்ட வாசகங்களை தாங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர். மிகப் பழமையான இந்த வைத்தியசாலை 2006ஆம் ஆண்டு முதல் தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டபோதும் போதிய வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்த பேரணியை ஏற்பாடு செய்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் கருத்து தெரிவித்த போது,

"இந்த வைத்தியசாலையானது தள வைத்தியசாலையாக இருப்பதனால் மூதூர் பிரதேச மக்கள் மட்டுமன்றி ஈச்சிலம் பற்று, சேருவில பிரதேசங்களையும் உள்ளடக்கி சுமார் ஒரு இலட்சம் பேர்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

ஆனால் குறைந்தளவான ஆளணியினரும் பௌதீக வளப்பற்றாக்குறையும்  மக்களுக்கு போதிய வைத்தியசேவையை வழங்குவதற்குத் பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும் நாளொன்றுக்கு வெளி நோயாளர் பிரிவிற்கு மட்டும் 400ற்கும் அதிகமான நோயாளர்கள் வருவதாகவும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஓரிருவரே கடமையில் இருக்கின்றனர்.

இதனால் ஒரே நேரத்தில் பெருந்தொகையாக வந்து குவிகின்ற நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில காலமாக இயங்கி வந்த சத்திர சிகிச்சை கூடம் ஆளணி பற்றாக்குறையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது.  அவசர சிகிச்சைப் பிரிவும் போதிய வசதிகள் இன்றியே இயங்கி வருகின்றது. கதிரியக்க கூடமும் முறையாக இயங்க முடியவில்லை. கிளினிக் வரும் நோயாளர்கள் அமர்ந்திருப்பதற்கு போதிய இடமில்லாது அங்குமிங்கும் குந்திக்கொண்டு இருக்கும் நிலையே இருக்கின்றது.

வைத்தியர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் முறையான விடுதி வசதிகூட இந்த வைத்தியசாலையில் இல்லை. அவர்கள் பெரும் தியாத்தோடுதான் இங்கு தங்கியிருந்து சேவையாற்றுகின்றனர். எனவே, இவ்வைத்தியசாலையில் வைத்திய விடுதிகள், நோயாளர் விடுதிகள், மருந்துக் களஞ்சியம், கதிர் இயக்க கூடம், இரத்த வங்கி, ஆய்வு கூடம் முதலானவை முறையாக அமைக்கப்பட வேண்டும்.

பற்றாக்குறையாக  இருந்து வருகின்ற அத்தியவசிய உபகரணங்களும் போதிய ஆளணியினரும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த வைத்தியசாலையினால் சிறந்த சேவையை வழங்கமுடியும்" என்றார்.

பேரணி முடிவின் போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கென மகஜர் ஒன்று மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X