2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. கண்டி பல்லேகெல மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியான அவுஸ்திரேலியா, சிறந்த போர்மில் இருக்கும் ஸ்டீவன் ஸ்மித்தின் தலைமையில் களமிறங்குகிறது. இலங்கை அணியோ, 7ஆவது இடத்தில் காணப்படுவதோடு, அதன் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அண்மைய சில போட்டிகளில் போதியளவு ஓட்டங்களைப் பெறத் தடுமாறியுள்ளார்.

வழக்கமாக ஆசியாவில் தடுமாறும் அவுஸ்திரேலிய அணி, இலங்கையில் மாத்திரம் சிறப்பான பெறுபேறுகளைக் கொண்டு விளங்குகிறது. இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடர்கள் ஐந்தில், நான்கு தொடர்களில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரில், இலங்கைக்கு வெற்றி கிடைத்தது.

அவுஸ்திரேலிய அணி, பலமான அணியாகவே காணப்படுகிறது. டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் உலகத்தரமிக்க துடுப்பாட்ட வீரர்களாக இருக்க, டெஸ்ட் போட்டிகளில் 95.5 என்ற சராசரியைக் கொண்ட அடம் வோஜஸூம், முக்கியமான வீரராகக் காணப்படுகிறார். பந்துவீச்சில், பயிற்சிப் போட்டியில் கலக்கிய ஸ்டீவன் ஓப் கீ மற்றும் இதற்கு முன்னர் இடம்பெற்ற இலங்கைத் தொடரில் தனது அறிமுகத்தை மேற்கொண்டு, அவுஸ்திரேலியாவின் முதல்நிலை சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ள நேதன் லையன் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் கலக்க, மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட் ஆகியோர், வேகப்பந்து வீச்சாளர்களாகத் தம்மை நிரூபித்தவர்களாவர்.

இலங்கையைப் பொறுத்தவரை அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், குசால் பெரேரா, குசால் மென்டிஸ் ஆகியோர் முக்கியமான வீரர்களாக உள்ள நிலையில், பந்துவீச்சில் ரங்கன ஹேரத் மாத்திரமே, நம்பிக்கைக்குரிய வீரராக உள்ளார்.

எதிர்பார்க்கப்படும் இலங்கைக் குழாம்: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, குசால் பெரேரா, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், விஷ்வா பெர்ணான்டோ, நுவான் பிரதீப்.

அவுஸ்திரேலியாவின் விளையாடும் பதினொருவர் விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வீரர்களின் விவரம்:
டேவிட் வோணர், ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், ஸ்டீவன் ஓப் கீ, மிற்சல் ஸ்டார்க், நேதன் லையன், ஜொஷ் ஹேஸல்வூட்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .