2025 ஜூலை 12, சனிக்கிழமை

மொனாக்கோ கிரான்ட் பிறிக்ஸை வென்றார் வெட்டல்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனாக்கோ கிரான்ட் பிறிக்ஸில், பெராரி அணியின் ஜேர்மனியின் ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், தனக்கும் மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனுக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை, 25 ஆக அதிகரித்துக் கொண்டுள்ளார்.  

நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற மொனாக்கோ கிரான்ட் பிறிக்ஸில், ஒரு முறை மட்டுமே, டயர்களை மாற்ற, பெராரி அணியின் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பந்தயத்தை ஆரம்பித்த டயர்களிலேயே நீண்ட தூரம் காரைச் செலுத்தி, பந்தயத்தை முதலாவதாக ஆரம்பித்த சக பெராரி அணி ஓட்டுநரான, பின்லாந்தின் கிமி றைக்கோனனைத் தாண்டி, பந்தயத்தில் வெட்டல் வெற்றிபெற்றார்.  

இந்நிலையில், தமது முன்னணி ஓட்டுநரான வெட்டலை, பந்தயத்தில் முன்னிலைக்கு கொண்டுவருவதற்காக, முன்னிலையில் இருந்த றைக்கோனனை, 34ஆவது சுற்றில் டயர்களை மாற்ற பெராரி அழைத்ததா என்ற சந்தேகம் பரவலாக நிலவிய நிலையில், அவ்வாறில்லை என பெராரி அணி மறுத்திருந்தது.  

றைக்கோனனை, 34ஆவது சுற்றில் டயர்களை மாற்ற அழைத்தமை, ஏற்கெனவே திட்டமிடப்பட்டதொன்று என பெராரி அணி தெரிவித்திருந்தது. 34ஆவது சுற்றில், டயர்களை மாற்ற அழைக்கப்பட்ட றைக்கோனன், பந்தயத்தில் மீண்டும் இணையும்போது, பின்னால் வந்த கார்களின் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருந்தார். மறுபக்கம், 39ஆவது சுற்று வரை, ஆரம்ப டயர்களிலேயே காரைச் செலுத்த அனுமதிக்கப்பட்ட வெட்டல், 34 தொடக்கம் 39 வரையான ஐந்து சுற்றுகளிலும் வேகமாக காரைச் செலுத்தி, பின்னர் பந்தயத்தில் மீண்டும் இணையும்போதும், முதலாவதாகவே பந்தயத்தில் இணைந்திருந்தார்.  

இப்பந்தயத்தின் முதலாம், இரண்டாம் இடங்களை, முறையே வெட்டலும் றைக்கோனன் பெற்ற நிலையில், மூன்றாமிடத்தை, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான  டானியல் றிச்சியார்டோ பெற்றார். பந்தயத்தை 13ஆவதாக ஆரம்பித்த ஹமில்டன், ஏழாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.  

இப்பந்தயத்தின் முடிவில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், 129 புள்ளிகளுடன் முதலிடத்தில் வெட்டல் காணப்படுவதுடன், 104 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஹமில்டன் காணப்படுகின்றார். மூன்றாமிடத்தில், ஹமில்டனின் சக மெர்சிடிஸ் ஓட்டுநரான பின்லாந்தின் வல்ட்டேரி போத்தாஸ், 29 புள்ளிகள் குறைவாக, 75 புள்ளிகளுடன் உள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .