Janu / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார்.

முந்திய செய்தி...
எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை,அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாநகர சபைக்கு உரித்தான கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே உள்ள அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை கட்டுமானத்தை அண்மித்து இந்த புதிய வணக்கஸ்தல கட்டுமானம் அமைக்கும் வேலைகள் திடீர் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமான வேலைகள் ஒரு குழுவினரால் சனிக்கிழமை (15) அன்று நள்ளிரவில் திடீர் என ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பில் அறிந்த கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளத்திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்தை ஞாயிற்றுக்கிழமை (16) பார்வையிட்டனர்.பின்னர் இது பற்றி திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.அதன் பின்னர் பொலிஸார் அங்கு சென்று கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தினர்.எனினும் கட்டுமான வேலைகளை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் திங்கட்கிழமை (17) பொலிஸார் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள உள்ளதாக அறிய முடிகின்றது.
இதே வேளை இந்த கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட அனுமதி அற்ற சிற்றுண்டிச்சாலை கடந்த 5 ந் திகதி கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்கள அதிகாரிகள் அகற்ற சென்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி பௌத்த பிக்குவால் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.அந்த 7 நாள் கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை(16) முடிவடைந்துள்ளது.
அதன்படி திங்கட்கிழமை(17) அன்று சட்ட அனுமதியற்ற சிற்றுண்டிச்சாலை தமது திணைக்களத்தால் உடைத்து அகற்றப்பட்டுள்ளது என கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்கள அதிகாரி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .