2025 மே 19, திங்கட்கிழமை

அமெரிக்காகூட செய்யாததைச் செய்வதற்கு துடிக்கிறது இலங்கை

Yuganthini   / 2017 ஜூலை 03 , மு.ப. 06:50 - 1     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது.   

அதனடிப்படையில், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டோர் மற்றும் குற்றவாளிகள் ஆகிய எந்தவொரு நபர்களையும் தங்களிடம் கையளிக்குமாறு, எந்தவொரு வெளிநாடும் இலங்கையிடம் கோர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டஎம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று (02) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், உலகத்தில் உள்ள நாடுகளில் பல இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அதில் அடங்குகின்றன.  

அத்துடன், டென்மார்க், பின்லாந்து, நோர்வே, சுவீடன், அயர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம், ‘காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை’ இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளது. அத்துடன், அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, அதனை உறுதிப்படுத்தியும் அந்தச் சட்டமூலத்தின் எட்டாவது உறுப்புரையின் பிரகாரம், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட எந்தவொரு நபர்களையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு வெளிநாடுகள், இலங்கையிடம் கோர முடியும்.   

அவ்வாறான கோரிக்கையொன்று வெளிநாட்டிலிருந்து விடுக்கப்படுகின்றபோது, அந்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்காவிடின், அந்த நபர்களை வெளிநாட்டிடம் கையளிக்க வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும்.   

அந்தச் சட்டமூலத்தின் 21ஆம் பிரிவுக்கு அமைய, இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எதிராக சர்வதேச உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான நிறைவேற்று அதிகாரம் கிடைத்துள்ளது,  

அந்தச் சட்டமூலத்தின் 23ஆம் பிரிவுக்கு அமைவாக, இந்தச் சட்டமானது, எழுதப்பட்ட ஏனைய அனைத்துச் சட்டங்களையும் உடன் இணைத்துக்கொண்டதாக அமைந்துள்ளது.  

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான சர்வதேசப் பிரகடனத்தின் 10ஆம் மற்றும் 11ஆம் உறுப்புரைகளுக்கு அமைவாக, அந்தப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள உறுப்பு நாடொன்று, காணாமல் ஆக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவராக இருந்தாலும், சிறைப்படுத்துவதற்கான அதிகாரம் உண்டு. அவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட நபரை, அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பாமல், அந்த நாட்டிலேயே அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்து சிறையிலடைக்கலாம்.   

கைதுசெய்யப்பட்ட நபரின், தாய் நாடானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் உட்பாடாது இருப்பின், அந்த நபரை சிறைப்படுத்தி, அந்த நாட்டின் விருப்பத்துக்கு ஏற்ப, அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கமுடியும்.   

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் 32ஆம் பிரிவின் பிரகாரம், அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கின்ற எந்தவொரு வெளிநாடும், இலங்கையானது அந்த உடன்படிக்கையின் கீழுள்ள பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்று, ஜெனீவாவில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான குழுவில்’ முறைப்பாடு செய்யலாம்.   

அவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்குமாயின், அந்தக் குழுவுக்கு, இலங்கை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அதிகாரம் கிடைக்கும். அதாவது, இந்த உடன்படிக்கையின் 32அவது உறுப்புரையை இலங்கை ஏற்றுக்கொண்டமை விசேட அம்சமாக அமைந்துள்ளது.   
இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் அதில் அடங்குகின்றன.  

அத்துடன், டென்மார்க், பின்லாந்து, நோர்வே, சுவீடன், அயர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் அதாவது, 2007ஆம் ஆண்டு அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பில் இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் பல நாடுகள், அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளாது அதில், கைச்சாத்திடுவதிலிருந்து விலகி உள்ளன.   

அந்த நாட்டின் பிரஜைகள், நபர்களின் உரிமையைக் கடுமையாக மீறுவதற்கான இடமிருந்தமையால்தான், அவ்வாறான நாடுகள், அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என்பது தெளிவாகின்றது.   

ஒரு நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றம் தொடர்பில், வேறொரு நாட்டின் நீதிமன்றம் அல்லது மற்றைய நாடுகளின் குழுமம் ஊடாக நிதியைச் செலவழித்து முன்னெடுக்கப்படுகின்ற, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கில் முகங்கொடுப்பதற்கு, பிரதிவாதிக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.   

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும், அரசியல் அபிலாஷைகளின் ஊடாகவே எல்லோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும். காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சகல காரணங்களும். அதாவது கடத்திச்செல்லல், சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்தல், படுகொலை செய்தல் மற்றும் சட்டவிரோதமான முறையில் சடலத்தை சேதப்படுத்தி அழித்தல் அல்லது மறைத்துவைத்தல் உள்ளிட்ட காரணங்கள் யாவும் எமது நாட்டில் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கட்டளைகளில் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.   

ஆகையினால், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் உண்மையான செயற்பாடு, நாட்டின் நீதி நியாயக்க நிர்வாகத்தில் தலையிடுவதற்கான இடத்தை கொடுப்பது மட்டுமாகும்.   

ஆகையால், சில சட்டமூலங்களுக்கு எதிராக வாக்களித்தல், இலங்கைக்கு ஏற்படப்போகும் சேதத்தைக் குறைப்பதற்கான சந்தர்ப்பமாகும். ஆகையால், அந்தச் சந்தர்ப்பத்தை நாடாளுமன்றத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.   

புதிய சட்டமூலத்தில் ‘யுத்தக்குற்றம்’ என்ற வசனம் பயன்படுத்தப்படாமல், அதற்குப் பதிலாக ‘காணாமலாக்கப்பட்டோர்’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுடைய படைவீரர்களை, யுத்தக்குற்ற நீதிமன்றங்களில் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் காட்டிக்கொடுப்பதற்காகும்.  

 ‘காணாமலாக்கப்பட்டோர்’ என்ற வசனத்தைப் பயன்படுத்தும்போது, காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என்ற அப்பாவித்தனமானதாகவே அது இருக்கும்.   

யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டோர் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், ஆயுதப்படையினால் ‘மரணமடைந்து இருப்பதாக நம்பப்படுதல்’ என்பதனால், இந்த முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பில் காணாமலாக்கப்பட்டோர் மட்டுமே கவனத்திற்கொள்ளப்படும்.   

வெளிநாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த புலிகளும் அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச அமைப்புகளும் உள்ளன. யுத்தத்தில் பலியான புலி பயங்கரவாதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாகி, வேறு அடையாளங்களில் வாழ்கின்ற புலிகள், ‘காணாமலாக்கப்பட்டோர்’ என்றே கருதப்படவுள்ளனர்.  

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தல், புலம்பெயர்ந்த புலிகள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு தாய்நாட்டைக் காட்டிக்கொடுப்பதாகவே அமையும் என்பதை நாடாளுமன்றத்தில் உள்ள சகல மக்கள் பிரதிநிதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 1

  • venthan Monday, 03 July 2017 10:14 PM

    Ethu nadaimuraippaduththappada vendum ethu nallathoru saddam

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X