2025 மே 17, சனிக்கிழமை

ஐ.நாவில் வைத்து ட்ரம்ப்புக்குக் கேலி

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொது விவாதத்தில், இரண்டாவது ஆண்டாக நேற்றும் (25) உரையாற்றிய போதிலும், சபையோரின் கேலியையே அவரால் சம்பாதிக்கக்கூடியதாக அமைந்தது.

ஐ.நா செயலாளர் நாயகத்தைத் தொடர்ந்து, பிரேஸில் ஜனாதிபதி உரையாற்ற, அடுத்ததாக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் உரை இடம்பெறவிருந்தது. ஆனால், சபைக்கு அவர் தாமதமாக வர, மூன்றாவதாகவே அவர் உரையாற்றினார்.

அவரது உரையின் ஆரம்பத்தில் அவர், "இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில், எமது நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட எந்த நிர்வாகமும் அடையாத விடயங்களை, எனது நிர்வாகம் அடைந்துள்ளது" என்று குறிப்பிட்டார். ஆனால், இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த உலகத் தலைவர்களில் பலரும், சத்தமிட்டுச் சிரித்தனர்.

உலகத் தலைவர்களின் அந்த எதிர்வினையை எதிர்பார்க்காத ஜனாதிபதி ட்ரம்ப், "அந்த எதிர்வினையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. பரவாயில்லை" என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஏனைய நாடுகள் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஐ.அமெரிக்கா தீர்மானிக்காது என்று தெரிவித்த அவர், ஐ.அமெரிக்காவின் இறையாண்மையை மதிக்குமாறு மாத்திரம் கோருவதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் அதன் பின்னர், ஈரான், வெனிசுவேலா, சிரியா உள்ளிட்ட நாடுகள் மீது, கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார். ஈரானை, "ஊழல்மிகுந்த சர்வாதிகாரம்" என வர்ணித்தார். சிரியா, இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துமானால், அதற்கேற்ற பதிலடியை, ஐ.அமெரிக்கா வழங்குமெனவும் அவர் எச்சரித்தார். அதேபோல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சட்டரீதியற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், தம்மை மதிக்கும் நாடுகளுக்கு மட்டுமே, இனிமேல் வெளிநாட்டு உதவிகளை வழங்கப் போவதாகவும், இதன்போது அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் கடந்தாண்டு உரையில், வடகொரியாவுக்கு அவர் விடுத்த எச்சரிக்கையே, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால் இம்முறை, வடகொரியாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால், அணுவாயுதமழிப்பு இடம்பெறும்வரை, வடகொரியா மீதான தடைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .