Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 06 , மு.ப. 05:30 - 1 - {{hitsCtrl.values.hits}}
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இன மற்றும் அடிப்படைவாதங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளுக்காக ஆதரவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இவ்வாறான செயற்பாடுகளை தூண்டிவிட்டு செயற்படுபவர்கள் இறுதியில் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்படுவார்கள் என்பதே வரலாற்றுச் சான்றாகும்” என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆட்சியின் போது இன மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகள், அனுசரணையுடன் இடம்பெற்றிருந்தன. எனினும், தற்போது அவ்வாறான அனுசரணை எதுவும் வழங்கப்படுவதில்லை. இதுவே, இங்குள்ள வித்தியாசமாகும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற, பிரதமரிடம் கேளுங்கள் நேரத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாகக் கேள்வியெழுப்பிய மரிக்கார் எம்.பி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன மற்றும் அடிப்படைவாதங்களை பரப்பும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இவற்றைத் தடுக்கவும் நாட்டில் சட்ட, ஒழுங்கை பாதுகாக்கவும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னவென்றும் கேட்டார்.
அதேபோல், அளுத்கம தர்கா நகரில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்றும் மரிக்கார் எம்.பி. இதன்போது வினவினார்.
அக்கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“எமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் நிமித்தம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இன மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் திட்டமிட்டு இடம்பெற்றிருந்தன. அனுசரணை இல்லாமல் அவை அப்போது இடம்பெற்றிருக்கவில்லை.
எனினும், நாம் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் சகல நடவடிக்கைகளையும் எடுத்திருந்தோம்.
நல்லிணக்கத்தையும் மத ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்வேறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில், காணாமல்போனோர் பற்றி அலுவலகம் ஸ்தாபிப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் என்பன எமது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், அண்மைய காலங்களில் சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், உண்மையில் இவற்றில் சில சம்பவங்கள், இனவாத மற்றும் அடிப்படைவாதச் செயற்பாடுகள் வகைக்குள் வரா” என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இனவாதத்துக்கு அர்த்தம் கற்பிப்பதற்கு, அதிகாரத்துக்கு வர முயல்வோரே பார்க்கின்றனர். இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதே இவர்களது நோக்கமாகும். எவ்வாறிருப்பினும், இன மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடிவடையும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், ஊடகங்கள் சிலவும் இந்த இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுகின்றன. சிலர் இதற்கு ஆதரவாகப் பேசினாலும் பெரும்பாலானோர் இதை ஆதரிப்பதில்லை. இருப்பினும், இனவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸாரால், இது தொடர்பில் ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனங்களுக்கிடையே ஒற்றுமையைப் பேணுவதற்கு மக்களிடம் தகவல்களை பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அளுத்கம, தர்காநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்துச் சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக, அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் நிரந்தர முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கோ அல்லது விகாரைகளுக்கோ சேதம் ஏற்படும் பட்சத்தில் தகுந்த நட்டஈடுகளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
இனவாத மற்றும் அடிப்படைவாதங்களில் தொங்கி, குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்பவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது. அவ்வாறு ஆதரவளிப்பது, தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, இனவாத மற்றும் அடிப்படைவாதங்களுக்கு இங்கு இடமளிக்கப்படமாட்டாது. அப்படியானவர்கள் இறுதியில் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிப்பட்டமை தான் வரலாற்றுச் சான்றாகும்” என்று தெரிவித்தார்.
33 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
bala Thursday, 06 July 2017 05:22 AM
good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago